நான் ஒரு சைக்கோ... அச்சு பிசகாமல் கூறும் கொலையாளி கார்த்திகேயன்

தாயின் வளர்ச்சிக்காகவே, உமா மகேஷ்வரியை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ள கார்த்திகேயன், போலீசாரிடம் திரும்ப திரும்ப தான் ஒரு சைக்கோ என கூறி அதிர வைத்துள்ளார். தமிழகத்தை உலுக்கிய, நெல்லை கொலை சம்பவம் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்கள் குறித்து அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு
x
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி மற்றும் அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய 3 பேரும் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளி கார்த்திகேயனை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்த நிலையில் கைதான கார்த்திகேயன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம், பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது... 

திமுகவில் பெரிய சக்தியாக வளர வேண்டிய தன் தாய் சீனியம்மாள், உமா மகேஷ்வரியால் கட்சியில் ஓரம் கட்டப்பட்டதாகவும், இதனால் சிறுவயது முதலே உமா மகேஷ்வரியை தீர்த்துக்கட்ட, தான் திட்டம் தீட்டியதாக சொல்லி அதிரவைத்துள்ளார். 

கொலை நடந்த ஜூலை 23ஆம் தேதி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் போலீசார் பிஸியாக இருப்பார்கள் என்பதால் தான் அன்றைய தினத்தை கொலை செய்ய தேர்வு  செய்ததாக கூறியுள்ளார். 

நெல்லைக்கு வந்த பிறகு உமா மகேஷ்வரியின் வீட்டை காரில் சென்று நோட்டம் விட்ட பிறகே அவரது வீட்டுக்குள் நுழைந்தேன் என கூறியுள்ளார். 

காரை அந்த பகுதியில் உள்ள சர்ச் அருகே நிறுத்தி வைத்து விட்டு நடந்தே உமா மகேஷ்வரி வீட்டுக்கு சென்றதாகவும், தன்னை பார்த்த உமா மகேஷ்வரியின் கணவர் என்ன விஷயம் என கேட்டதாகவும் கூறியுள்ளார். 

தன்னுடைய அம்மாவுக்காக பேச வந்திருப்பதாக கூறியதால் முருகசங்கரன் வீட்டுக்குள்ளே அனுமதித்துள்ளார். நேராக சென்று ஷோபாவில் அமர்ந்த கார்த்திகேயன், உங்களால் தான் என் அம்மாவின் அரசியல் வாழ்க்கையே முடிந்து போனது என ஆவேசமாக கூறியுள்ளார். 

சத்தம் கேட்டு வெளியே வந்த உமா மகேஷ்வரி, இதுபோல் எல்லாம் பேசக்கூடாது.. வெளியே போ என கூறியதால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் உமா மகேஷ்வரியை குத்தியுள்ளார். அதைப்பார்த்த முருகசங்கரன், ஓடி வந்து தடுத்த போது அவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முருகசங்கரன், உயிர் பிழைக்க படுக்கை அறைக்குள் புகுந்து கதவை சாத்த முயன்றுள்ளார். 

ஆனால் அவரை கீழே தள்ளி கொன்றுவிட்டு வெளியே வரும் போது உமா மகேஷ்வரி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆத்திரம் தீரும் வரை அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். 

இருந்தாலும் இந்த சம்பவத்தை நகைக்காக நடத்தியது போல இருக்க வேண்டும் என நினைத்த கார்த்திகேயன், இருவர் அணிந்திருந்த நகைகளையும் எடுத்துக் கொண்டு பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள், பணம் இவற்றை எடுத்துக் கொண்டுள்ளார். 

நகைக்காக நடந்த கொலையாகவே இருக்க வேண்டும் என ஜோடித்துக் கொண்டிருந்த போது தான் வீட்டு வேலைக்கார பெண் மாரி வந்துள்ளார். திடீரென வீட்டுக்குள் வந்த அவர், உள்ளே நடந்த சம்பவங்களை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவர் தன்னை காட்டி கொடுத்துவிடுவார் என்ற பயத்தால், அவரையும் வீட்டின் சமையல் அறைக்குள் அழைத்துச் சென்று அங்கிருந்த கத்தியால் குத்தியதாக கூறினார். 

கத்தியால் குத்தியபிறகும் அவர் இறக்காததால் வீட்டில் இருந்த பாத்திரங்களை எல்லாம் எடுத்து அவர் தலையில் அடித்து கொலை செய்ததாக அவர் கூறியதை கேட்டு போலீசாரே அதிர்ச்சியடைந்தனர். 

கொலை நடந்த இடத்தில் கைரேகைகள், தடயங்கள் என எதுவும் இல்லாமல் அழித்துச் சென்ற அவர், ரத்தக் கறைகளை நன்றாக கழுவிய பிறகே அங்கிருந்து சென்றதாக கூறியுள்ளார்.

நடந்த சம்பவங்கள் குறித்து தன் தாய் சீனியம்மாளிடம் கூறிய போது, அவர் அதைக் கேட்டு பதறியதாகவும், காரில் செல்லும் போது தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் நகை மற்றும் கத்தி வைத்திருந்த பையை ஆற்றில் வீசிச் சென்றதாகவும் கூறினார். 

அதுமட்டுமின்றி போலீசாரிடம் தான் ஒரு சைக்கோ என திரும்ப திரும்ப கார்த்திகேயன் கூறி வருவதும், கொலை நடந்த பின்னணியும் போலீசாருக்கு பெரும் தலைவலியாகவே இருக்கிறது... இந்த சம்பவத்தை கார்த்திகேயன் மட்டுமே அரங்கேற்றி இருக்க முடியுமா? அல்லது வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்