உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் அல்லல்படும் வேலூர் மக்கள் - எப்போது தீர்வு கிடைக்கும்..?

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகள் எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைச் சொல்லுகிறது இந்த தொகுப்பு.
x
பல்வேறு வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கிய வேலூர் மாவட்டத்தில் தாமதமாகி வரும் உள்ளாட்சி தேர்தலால் தங்கள் குறைகளை முறையிடுவதற்கு ஆள் இன்றி தவிக்கின்றனர் மக்கள்.

60 வார்டுகளை கொண்ட வேலூர் மாநகராட்சி, தற்போது மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு தேர்வாகியுள்ள நிலையில் இன்னும் அடிப்படை வசதிகளின்றி தவிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர் உள்ளூர்வாசிகள்

சதுப்பேரி என்ற இடத்தில் குப்பை கொட்ட கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குப்பை கொட்டவதற்கு மாற்று இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும், இதனால் குப்பை பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர் மக்கள். தண்ணீர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, தற்போது பத்து நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுவதால் காசு கொடுத்து தண்ணீர் வாங்குவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், குண்டும் குழியுமான சாலைகளில் வாகனங்களில் செல்ல கூட இடமின்றி அல்லல்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர் வேலூர் மக்கள். தெருவிளக்குகள் பல இடங்களில் எரிவதில்லை, சாக்கடை நீர் செல்ல கால்வாய் வசதி இல்லை, பராமரிக்கப்படாத சாலைகளால் போக்குவரத்து நெரிசல், பாலாற்றில் கொட்டப்படும் குப்பைகளால் நிலத்தடி நீர் மாசு, என கடுக்கடுக்காக மக்களின் புகார் பட்டியலோ நீள்கிறது. இவைகளை, அவர்களின் பிரநிதியாக செவிக் கொடுத்து கேட்பதற்கு கூட ஆளில்லாத நிலையே நீடிக்கிறது. 

பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்க, உள்ளாட்சி தேர்தல் மூலம் தங்களின் பிரதிநிதியை தேர்வு செய்ய ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர், வேலூர் மக்கள்.

Next Story

மேலும் செய்திகள்