நள்ளிரவிலும் குடிநீருக்காக காத்து நிற்கும் மக்கள்.... சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம்

சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதாக புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள் நள்ளிரவிலும் குடிநீருக்காக பல மணி நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
x
சென்னையில் கோடை காரணமாகவும், போதிய மழை பெய்யாததாலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னைக்கு குடி நீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய  முக்கிய ஏரிகள் போதிய தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. ஆனாலும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க குடிநீர் வாரியம் , மாநகராட்சி  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆழ்கிணறுகள், கல்குவாரிகள், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தண்ணீரை எடுத்து ஆயிரக்கணக்கான குடிநீர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டும் தண்ணீர் பஞ்சம் தீர்ந்தபாடில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சூளைமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு, மூன்று தெருக்களுக்கு ஒரு அடிபம்பில் மட்டுமே தண்ணீர் வருவதால் குடங்களை நீண்ட வரிசையில் வைத்து நள்ளிரவில் தூக்கம் கெட்டு காத்து கிடக்க வேண்டியுள்ளதாக பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இரவில் தண்ணீர் தேடி அலைய வேண்டியுள்ளதால்  பகலில் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும், அன்றாட பணிகளை சரிவர செய்ய முடிவதில்லை என்றும் மக்கள் குமுறுகிறார்கள். சென்னையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரமாக நடைமுறை படுத்த வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் ஆண்டு தோறும் ஏற்படும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நிரந்தரமாக ஒரு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு...

Next Story

மேலும் செய்திகள்