ஆட்சியர் அலுவலகத்தில் 500 மயில்கள் தஞ்சம் : கஜா புயலில் மரங்கள் சேதமானதால் வாழ்விடம் இன்றி தவிப்பு

மனதை மயக்கும் தேசியப் பறவையான மயில், உணவும், வாழ்விடமும் இன்றி வீதிக்கு வந்து வாகனங்களில் சிக்குவது, புதுக்கோட்டை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
வனம் நிறைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக வாழும் மயில்களின் வாழ்க்கையும் கஜா புயலில் சிக்கி சிதைந்துவிட்டது. கனி தரும் மரங்கள் புயலில் வேரோடு சாய்ந்தன. இலை தழைகளின் மறைவும், உணவும் இன்றி போனதால், மயில்கள் வீதிக்கு வந்தது இயற்கை தந்த சோகம். குறைகளை சொல்லி முறையிட்டு நிவாரணம் பெற மக்கள் நாடும்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  மயில்களும் தஞ்சமடைந்து தங்களது குறைகளை இலைமறை காயாக உணர்த்தி வருகின்றன. உணவும் தண்ணீரும் தேடி அவை அவ்வப்போது வீதிக்கு வந்துவிடுகின்றன. இறுக்கமான மனதோடு ஆட்சியர் அலுவலகம் வரும் மக்களுக்கு, தோகை விரித்து மனதை வருடும் மயில்களே நிவாரணம். 
           
இந்த மயில்களுக்கு ஈகை குணமுடைய தனிநபர்கள் சிலர் உணவளித்து வருகின்றனர். ஆட்சியர் அலுவலகம் வருவோர் சிந்தும் உணவுகளும் இவற்றின் பிழைப்புக்கு பிரதானம். தண்ணீரும், உணவும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தேசியப் பறவையான மயில்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்