உடையாளூரில் ராஜராஜன் நினைவிடமா ? - நவீன கருவிகள் மூலம் புதைபொருள் ஆராய்ச்சி

கும்பகோணம் அருகே உடையாளூரில் தொல்லியல் துறை சார்பில் இரண்டு நாட்களாக ஆய்வுகள் நடைபெற்றன. பல்வேறு தரப்பிலும் வரவேற்பு பெற்றுள்ள இந்த ஆய்வுகள் மூலம் ராஜராஜ சோழன் நினைவிடம் மற்றும் சோழர் கால வரலாறு தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாக உள்ளது.
x
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பழையாறு, உடையாளூர் பகுதிகளில் ராஜராஜ சோழன் வாழ்ந்த ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.  இங்குள்ள சிவன் கோவில்களில் ராஜாராஜனின் சிலைகளும் காணப்படுகின்றன. 

உடையாளூரில் ஒரு தோப்பில் சிவலிங்கத்தை வழிபட்டு வரும் மக்கள், அந்த இடம் ராஜராஜ சோழன் நினைவிடம் எனக் கருதி ஆண்டுதோறும் சதய விழா எடுத்து வருகின்றனர். பல்வேறு சமூக அமைப்புகள்,  தமிழ் ஆர்வலர்கள்,  ஆராய்ச்சியாளர்கள் என ஏராளமானோர் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.

இந்த நிலையில்தான் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.  உடையாளூரில் ராஜராஜன் நினைவிடம் உள்ளதாக நம்பப்படுகிற இடத்தில்  தொல்லியல் துறை ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்,  உடையாளூரில் தொல்லியல் ஆதாரங்கள் உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து,   கீழடியில் ஆராய்ச்சி மேற்கொண்ட தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் உடையாளூர் வந்து ஆய்வுகளை நடத்தி உள்ளனர்.

ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் முதல்கட்ட ஆய்வை தொடங்கிய அந்த குழுவினர், பத்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளனர். 

அவர்களைத் தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் ,  பூமிக்கடியில் உள்ளவற்றை ஸ்கேன் செய்யும்  நவீன கருவிகளை கொண்டு, சிவலிங்கம் புதைந்துள்ள தோட்டத்தில் ஆய்வுகளை நடத்தினர். இந்த நவீன கருவிகள் மூலம், பூமியில் புதைந்துள்ள கட்டிடங்கள்,  சிலைகள், கல்வெட்டுகள்  ஆகியவற்றை கண்டறிய முடியும்.
 
இந்த ஆய்வுகள் அடிப்படையில் உடையாளூரில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்கள் குறித்த அறிக்கையை ஒரு வாரத்தில் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு தொல்லியல் துறை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர் உடையாளூரில் தொல்லியல் ஆய்வு தொடங்கலாமா ?  வேண்டாமா ? என நீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது.  அதேநேரத்தில் ஆய்வு மேற்கொண்ட  இடங்களில் சிலைகள் மற்றும் புதையுண்ட கட்டிடங்கள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை  மாமன்னன் ராஜராஜன் வாழ்ந்தது இங்கு தான்எ என்பது உறுதி செய்யப்பட்டால், தமிழக அரசு உடையாளுரில்  மணி மண்டபம் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை இப்போதே எழத் தொடங்கியுள்ளது.

தமிழர்களின் வரலாறு புதைந்திருப்பதாக நம்பப்படும் இடத்தில்,  தொல்லியல் துறை நடத்தியுள்ள முதற்கட்ட ஆய்வுகள்  அனைத்து தரப்பினரையும் உற்சாகப் படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

Next Story

மேலும் செய்திகள்