பணம் இருப்பதாக கூறி கன்டெய்னர் லாரி சிறைபிடிப்பு : நள்ளிரவில் பரபரப்பு...

கோவை தொண்டாமுத்தூரில் பணம் இருப்பதாக கூறி, பொதுமக்கள் கண்டெய்னர் லாரியை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
x
கோவை தொண்டாமுத்தூரில் பணம் இருப்பதாக கூறி, பொதுமக்கள் கண்டெய்னர் லாரியை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வாகனத்தை பொதுமக்களிடம் இருந்து போலிசார் மீட்டனர்.

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று அதிவேகமாக சென்றதை கண்ட அப்பகுதியை சேர்ந்த 300க்கும்  மேற்பட்டோர் அதை மடக்கிப்பிடித்து, லாரி ஒட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்களை லாரி ஒட்டுனர் இரும்பு கம்பியால் அடிக்க வந்ததாக கூறப்படுகிறது. இதனால், வாகனத்தில் தேர்தலில் கொடுப்பதற்கான பணம் இருப்பதாக சந்தேகமடைந்த பொதுமக்கள் வாகனத்தை சிறைப்பிடித்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலிசார் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து அங்கு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், அதை திறக்க முயற்சி மேற்கொண்டனர். எனினும் அதன் கதவில் டிஜிட்டல் லாக் போடப்பட்டிருந்ததால் திறக்க முடியவில்லை. அதற்குள் என்ன இருக்கிறது என்பது தெரியும் வரை கலைந்து செல்ல பொது மக்கள் தொடர்ந்து மறுத்ததால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாதுக்காப்புடன் கொண்டு செல்லப்பட்ட கண்டெய்னர் அங்கு திறக்கப்பட்டது. அப்போது அதில்  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட டீத்தூள் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. எனினும் அதை முழுவதுமாக சோதனை செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, காலையில் அனைத்து பாக்கெட்டுகளும் திறந்து பார்த்த பின்பு தான், உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் அங்கிருந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்