கஜா புயலால் கண்ணீர் சிந்தும் வேளாண் செம்மை விருது பெற்ற விவசாயி

விவசாயத்தில் பலருக்கு முன்னுதாரணமாக இருந்து, விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்ற விவசாயி, கஜா புயல் பாதிப்பால், வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கிறார். அவரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கெழுவத்தூர் கிராமத்தில் விவசாயமே பிரதான தொழில். இங்குள்ள விவசாயி தெய்வமணி, அவருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் அமைத்துள்ள கூட்டு பண்ணையில் மீன் குட்டை, கோழிப்பண்ணை மற்றும் தென்னை, தேக்கு, நிலவேம்பு உள்ளிட்ட அதிக லாபம் தரும் மரங்களை பயிரிட்டார்.

கடந்த 8 ஆண்டுகளாக கடும் உழைப்பால் உருவாக்கப்பட்ட கூட்டுப் பண்ணையை, வேளாண்மை கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பார்வையிட்டு,  தெய்வமணியிடம் ஆலோசனைகளை பெற்று பயனடைந்துள்ளனர். கோவை வேளாண் பல்கலைக்கழகம் தெய்வமணிக்கு,  "வேளாண்மை செம்மை விருது" வழங்கியுள்ளது. 

மாவட்ட ஆட்சியரும் பண்ணையை பார்வையிட்டு பாராட்டி சென்றதாக தெரிவித்த விவசாயி தெய்வமணி, கஜா புயல் தாக்கியதால் பண்ணை முழுவதும் அழிந்து வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகத் தெரிவித்தார். 

இந்நிலையில், டிராக்டர் வாங்க வங்கியில் பெற்ற கடனை கட்டச் சொல்லி தற்போது அதிகாரிகள் மிரட்டுவதால்  தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

விவசாயத்தில் பலருக்கு முன்னுதாரணமாக இருந்த 
தெய்வமணியின் வாழ்வை ஒரே இரவில் அழித்துவிட்டது கஜா புயல். குடியிருந்த வீடும் சேதமடைந்த நிலையில் தவிக்கும் அவருக்கு அரசு நிவாரணம் வழங்கி உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Next Story

மேலும் செய்திகள்