கஜா புயல் : பெருந்தன்மையோடு நிலத்தை கொடுத்த விவசாயிகள்

திருவாரூர் அருகே மின்கோபுரத்தை சரி செய்வதற்காக விளைநிலங்கள் வழியாக விவசாயிகள் பாதை அமைத்துக் கொடுத்தனர்.
கஜா புயல் : பெருந்தன்மையோடு நிலத்தை கொடுத்த விவசாயிகள்
x
கஜா புயலால் டெல்டா பகுதியே உருக்குலைந்து காணப்படுகிறது. திரும்பும் திசை எல்லாம் மரங்களும் சிதிலமடைந்த வீடுகளுமாகவே காட்சி தருகிறது. மின் கோபுரங்கள் மற்றும் கம்பிகளும் புயலில் சிக்கியதால் பல கிராமங்கள் இன்னும் இருளில் இருந்து மீண்டு வராமலே இருக்கிறது. தமிழக மின்சார வாரியம் மின் இணைப்பை கொடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினாலும் பல இடங்களில் நடந்து செல்வதற்கான பாதைகளே இல்லை எனும் அளவுக்கு சூழல் மோசமாகவே இருக்கிறது. 

வழியெங்கும் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றி விட்டு செல்வது தாமதம் ஆகலாம் என்பதால் விளைநிலங்களில் பாதை அமைத்து கொடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் திருமலைநாஜபுரம் கிராமத்தில் முற்றிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மின்வாரிய அதிகாரிகள் அதனை சரிசெய்வதற்காக வந்தனர். 

ஆனால் மின்கோபுரம் அமைக்க உரிய பாதை இல்லாத காரணத்தால் மின்வாரிய அதிகாரிகள் தயங்கிய போது தங்கள் விளைநிலத்தையே பாதையாக மாற்றித் தர அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் முன் வந்தனர்.இதற்காக 25 ஏக்கர் விளைநிலங்களை பாதை அமைப்பதற்காக விவசாயிகள் கொடுத்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு பாதை அமைத்து கொடுப்பதற்காக விளைநிலங்கள் டிராக்டர்கள் கொண்டு மாற்றியமைக்கப்பட்டது. 

வயலையும், வருமானத்தையும் ஏற்கனவே இழந்த விவசாயிகள், தங்கள் பகுதிக்கு தேவையான மின்சாரத்திற்காக பெருந்தன்மையுடன் நிலத்தை வழங்கினர். 

Next Story

மேலும் செய்திகள்