அனுமதிக்கப்பட்ட நேரம் மீறி பட்டாசு வெடிப்பு : தமிழகத்தில் 786 வழக்குள் பதிவு
பதிவு : நவம்பர் 07, 2018, 07:20 AM
தமிழகத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 786 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையின் போது 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, தீபாவளி திருநாளில் தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக பல்வேறு பகுதிகளில் இதுவரை 786 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 97 வழக்குகளும், விழுப்புரத்தில் 255 வழக்குகளும், கடலூரில் 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

நெல்லை : குழந்தைகளின் பெற்றோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு 

சேரன்மகாதேவியில் காந்தி பூங்கா, கூனியூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்ததாக 15 சிறுவர்கள், பெற்றோர் உட்பட 25 பேரை சேரன்மகாதேவி போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களில்  6 பேர் கைது செய்யப்பட்டு  பின்னர் காவல் நிலைய ஜாமினில் அனுப்பப்பட்டனர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், தடையை மீறி செயல்படுதல்  உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வெடி வெடித்ததாக இதுவரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 80 பேர் மீது வழக்கு : 

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக, விருதுநகர் மாவட்டத்தில் 80 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 13 வழக்குகளும், சாத்தூரில் 15 வழக்குகளும், சிவகாசியில் 16 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், அருப்புக் கோட்டையில் 7 வழக்குகளும், திருச்சுழியில் 5, ஸ்ரீவில்லிபுத்தூரில் 12,  ராஜபாளையத்தில் 12 என மொத்தம் 80 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராசிபுரம் : ஒருவர் கைது

நாமக்கல் மாவட்டம்  ராசிபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த முனிராஜ் என்பவரது மகன் சித்தேஸ்வர பிரபு,  அவரது வீட்டின் முன்பு பட்டாசு வெடித்தார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகக் கூறி, அவரைக் காவல் உதவி ஆய்வாளர் பூபதி கைது செய்தார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது அரசு வழக்கறிஞரின் அறிவுறுத்தலின்பேரில், போலீஸார்  சொந்த ஜாமீனில் சித்தேஸ்வர பிரபுவை விடுவித்தனர்.  இந்நிலையில், தடையை மீறி  பட்டாசு வெடித்ததாக சீராபள்ளி, வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.