"தமிழகத்தில் இடைத்தேர்தல் தள்ளி வைக்க யாரும் நிர்பந்திக்கவில்லை" - ஓ.பி ராவத்

தமிழகத்தில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு யாருடைய நிர்பந்தமும் காரணம் இல்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இடைத்தேர்தல் தள்ளி வைக்க யாரும் நிர்பந்திக்கவில்லை - ஓ.பி ராவத்
x
"தமிழகத்தில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு யாருடைய நிர்பந்தமும் காரணம் இல்லை" - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத், தந்தி டி.வி-க்கு பிரத்யேக பேட்டி.
*"திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு முடிந்தால் தான் தொகுதி காலியானதாக அறிவிக்க முடியும்"
* "வழக்கு 23-ஆம் தேதி நிறைவடைந்தால், 2 தொகுதிகளுக்கும் ஜனவரிக்குள் தேர்தல் நடத்த வாய்ப்பு"
* "அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்த மனு நிலுவையில் இருப்பதால் கருத்து கூற முடியாது"

இது தொடர்பாக ஓ.பி ராவத்துடன் எமது செய்தியாளர் அரவிந்த் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...

கேள்வி - சமீபத்தில் பல மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் தமிழக தொகுதிகளுக்கு மட்டும் இல்லை. தமிழக அரசின் நிர்ப்பந்தத்தின் பேரிலே தேர்தல் அறிவிக்கப்படவில்லை என அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்களே? 

பதில் - அது போன்ற எந்த நிர்பந்தத்தையும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இந்த தேர்தல்கள் வரும் ஜனவரிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது. திருப்பரங்குன்றம் தொகுதி குறித்த தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதாக அது வரும் 23-ஆம் தேதி விசாரணைக்கு வரும் எனவும் தமிழக தலைமை செயலாளர் கடிதம் எழுதியிருந்தார். புயல் குறித்து எச்சரிக்கை விடுகக்ப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதனால் இந்த சமயத்தில் தேர்தல் நடத்துவது சரிவராது என தெரிவித்திருந்தார். யாராலும், எந்த தேர்தலையும் நடைபெறாமல் தடுக்க முடியாது. எனவே தேர்தல் ஆணையம் சட்டப்படி என்ன தேவையோ அதை தான் செய்கிறது. 

கேள்வி - ஆனால் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்த பல தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதற்கான காரணம் என்ன?

பதில் - இதுவரை தேர்தல் குறித்த மனுக்கள் நிலுவையில் இருக்கும் போது, தேர்தல் நடத்தப்பட்டதே இல்லை.. அது தவறான தகவல்

கேள்வி- தமிழகத்தில் இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும்? திருப்பரங்குன்றம் தொகுதி குறித்த தேர்தல் வழக்கு வரும் 23-ஆம் தேதி விசாரிக்கப்படுகிறதே.. அதற்கு பின்னர் தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறதா?

பதில் - தேர்தல் வழக்கு நிறைவடைந்த ஆறு மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதனால் திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலுக்கு நமக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. மீதமுள்ள இரண்டு தொகுதிகளுக்கும், ஜனவரிக்குள் தேர்தலை நடத்த வேண்டும். ஒருவேளை, 23 ஆம் தேதியன்று வழக்கு நிறைவடைந்தால் 3 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்.  

கேள்வி- பொதுச் செயலாளார் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான அதிமுகவின் உட்கட்சி தேர்தலை, தேர்தல் பார்வையாளரை நியமித்து நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதே.

பதில்- அதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. 

கேள்வி- நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறதே.. 

பதில்- அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. தமிழக அரசின் ஆட்சிக் காலம் 2021 வரை உள்ளது. அதனால் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.

Next Story

மேலும் செய்திகள்