புஷ்கரம் என்றால் என்ன?

நதிகளை வணங்கும் விழாக்கள் 'புஷ்கரம்' என அழைப்படுகின்றன
புஷ்கரம் என்றால் என்ன?
x
நதிகளை வணங்கும் விழாக்கள் 'புஷ்கரம்' என  அழைப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நதி என்று, நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள 12 புண்ணிய நதிக்கரைகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. 

அதாவது, ஒவ்வொரு நதிக்கும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் நடைபெறும். அதுவே, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹாபுஷ்கரமாக கொண்டாடப்படுகிறது. புராணங்களின் படி, புஷ்கரா என்று அழைக்கபடும் ஒரு அந்தணர், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்ததாகவும், அதன் பயனாக நதிகளை தூய்மைப்படுத்தும் சக்தியை பெற்றதாகவும் நம்பப்படுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் குரு எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதிகளில் இவர் வசிப்பாராம். அப்படி வசிக்கும்போது அந்த நதிகளில் நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது. அதே சமயம் முன்னோர்களுக்கான சடங்குகள், ஆன்மீக சொற்பொழிவுகள், கலாச்சார விழாக்கள் போன்றவையும் நதிக்கரைகளில் நடத்துவது வழக்கம். இதுவே புஷ்கர விழாவானது. 

இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் நம்பிக்கைகள் வேறுபடுவதால், சில ராசிகளுக்கு 2 நதிகளில் கொண்டாட்டம் நடக்கிறது.  

அதன் படி குரு மேஷத்தில் இருக்கும் போது கங்கா புஷ்கரம், ரிஷபத்திற்கு நர்மதா, மிதுனத்திற்கு சரஸ்வதி, கடகத்திற்கு யமுனா, சிம்மத்திற்கு கோதாவரி, கன்னிக்கு கிருஷ்ணா, துலாம் ராசிக்கு காவேரி, விருச்சிகத்திற்கு பீமா மற்றும் தாமிரபரணி, தனுசு ராசிக்கு தப்தி மற்றும் பிரம்மபுத்ரா, மகரத்திற்கு துங்கபத்ரா, கும்பத்திற்கு சிந்து நதி, மீன ராசிக்கு பிரன்ஹிதா என வரையறுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு துலாம் ராசியில் குரு இருந்த போது, தமிழகத்தில் காவேரி புஷ்கரம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு விருச்சிகத்திற்கு வருவதால், தமிழ்நாட்டில் தாமிரபரணியிலும் மஹாராஷ்டிராவில் பீமா நதிக்கரையிலும் புஷ்கரம் நடத்த திட்டமிட்டுள்ளனர் சமய வல்லுனர்கள். நம்பிக்கைகள் ஆயிரம் இருந்தாலும், புஷ்கரம் நடத்துவதன் மூலம், நதிகள் போற்றப்படுவதும், பாதுகாக்கப்படுவதும் தொடர வேண்டும் என்பதே அடிப்படை தத்துவம். 


Next Story

மேலும் செய்திகள்