அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் இல்லை - முதலமைச்சர், துணை முதலமைச்சர் உறுதி

அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் இல்லை எனவும், கூட்டணி தொடர்கிறது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர்.
x
நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜர் நகர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே தி.மு.க.வும் காங்கிரஸும் கூடி பேசி கூட்டணி தொடர்வதை உறுதி செய்தன. காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தும் பெற்றார். 

இதனிடையே, அதிமுக மூத்த தலைவர்கள், பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.விடம் வெளிப்படையாக ஆதரவு கேட்டனர். அந்த கட்சிகளும், தங்களது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தன. ஆனால், தமிழக பா.ஜ.க.விடம் அ.தி.மு.க. வெளிப்படையாக ஆதரவு கேட்கவில்லை. இதனால், ஆதரவு தருவதாக பா.ஜ.க. சொல்லவும் இல்லை.

புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதென அ.தி.மு.க. ஒப்பந்தம் செய்தது. இதனால், அதிருப்தி அடைந்த பாஜக, தங்களுடன் அ.தி.மு.க. கலந்து பேசவில்லை என, விருப்ப மனுக்களை பெற்று நேர்காணலை நடத்தியது. ஏற்கனவே, வேலூர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. தலைவர்களை, பிரசாரத்திற்கு அதிமுக அழைக்கவில்லை என பேசப்பட்டது. 3 சட்டப் பேரவை இடைத்தேர்தலிலும் பா.ஜ.க.விடம் வெளிப்படையாக அ.தி.மு.க. ஆதரவு கேட்காததால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதா? என்ற சலசலப்பு எழுந்துள்ளது. 

பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும், கூட்டணி தொடர்வதாக அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசனும் குறிப்பிட்டுள்ளனர். அதிமுக - பாஜக கூட்டணி உடைய வாய்ப்பே இல்லை என அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன் கூற, பாஜகவை ஒதுக்குவது அதிமுக தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம் என பத்திரிகையாளர் ரமேஷ் கூறுகிறார். 

இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தொடர்வதாக உறுதிபட கூறியுள்ளனர். தமிழக நிலவரம் இப்படியிருக்க, புதுச்சேரியில் அதிமுக- என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணியிலும் குழப்பம் நீடிக்கிறது. தமக்கு ஒதுக்கப்பட்ட காமராஜ் நகர் தொகுதியில் என். ஆர். காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், அங்கு முன்னாள் எம்எல்ஏ நேரு, அதிமுகவை அழைக்காமல் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கு அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன், கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால், ஆவேசம் அடைந்த முன்னாள் எம்எல்ஏ நேரு, தங்கள் கட்சித் தலைவர் ரங்கசாமியை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களே வழி நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் உறுதிப்படுத்தினாலும், தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இந்த கட்சிகள் வெளிப்படையாக சந்திக்காதவரை கூட்டணி குறித்த சலசலப்பு ஓயாது என்பது அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்