மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு

பொதுமக்களின் நலன் கருதி, தமிழகத்தில் ஆய்வு பணிகள் தொடரும் என, ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு
x
மாவட்டம் தோறும் ஆளுநரின் ஆய்வுக்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அரசியல் சாசனப்படி, மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு செய்வதற்கு ஆளுநருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் எந்த துறையின் செயல்பாட்டையும் ஆளுநர் இதுவரை விமர்சித்ததில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.சிக்கலான தருணங்களில் சரியான முடிவை எடுப்பதற்கும், மாதம்தோறும் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளிக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி, தமிழகத்தில் ஆய்வு பணிகள் தொடரும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு தொடர்ந்தால், போராட்டம் தீவிரமடையும் என ஸ்டாலின்
எச்சரிக்கை...

ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால், மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க, திமுக-வின் போராட்டக் கொடியும் உயரும் என்று அந்த கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசின் திட்டங்களை, ஆளுநர் ஆய்வு செய்வது தொடரும் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதில் அளித்துள்ள அவர், பிரதான எதிர்கட்சியான திமுக-வை மிரட்டப் பார்ப்பதா என்று கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்ச்சி, பல்கலைக்கழக நிகழ்ச்சி மற்றும் அலுவலக பணி தொடர்பான பயணத்தின்போது திமுக கருப்பு கொடி காட்டியதில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

அதே நேரத்தில் மாநில அரசின் உரிமை கடமை மற்றும் அதிகாரத்தில், மரபுக்கு மாறாக தலையிடுவதை எதிர்த்து தான் திமுக கருப்பு கொடி காட்டுவதாக அவர் விவரித்துள்ளார். இல்லாத அதிகாரத்தை, இருப்பதாக நினைத்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை,  ஆளுநர் சிறுமை படுத்துவதை திமுக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று அவர்  தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் ஒன்றும்  ஆளுநர் மாளிகையில் ஒன்றும் என இரட்டை அரசாங்கம் நடத்துவதற்கு அரசியல் சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால்,  கூட்டாட்சி தத்துவத்தையும் மாநில சுயாட்சியையும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகளையும் பாதுகாக்க, திமுகவின் போராட்ட கொடி உயர்ந்து கொண்டே இருக்கும் என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்