சூடு பிடித்துள்ள பீகார் சட்டமன்ற தேர்தல் களம் - இன்றுடன் நிறைவு பெறுகிறது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம்
பீகார் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதை அடுத்து, முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
பீகாரில் இன்று மாலை 5 மணியுடன் முதற் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைகிறது. மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது.முதற்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 71 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக மத்திய அமைச்சர்கள், பிற மாநில முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் முகாமிட்டு கடந்த சில நாட்களாக தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கனவே கடந்த 23ஆம் தேதி பீகாரில் உள்ள மூன்று இடங்களில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார்
இறுதி நாளான இன்று பாஜகவின் தேசிய தலைவரான ஜேபி நட்டா, அவுரங்காபாத் மற்றும் பூர்ணியா உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் இன்று ஒரே நாளில் வைஷாகி, சாஹேப்பூர் உள்ளிட்ட 4 இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், இன்று ஒரே நாளில் பகல்பூர், பங்கா உள்ளிட்ட 13 தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார்.முதல் கட்ட தேர்தலில் பல்வேறு கட்சிகளின் சார்பாக மொத்தம் ஆயிரத்து 64 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
Next Story