தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் யார்? - கிராம மக்கள் பரபரப்பு புகார்

தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது குறித்து, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பரபரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் யார்? - கிராம மக்கள் பரபரப்பு புகார்
x
தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் யார்?தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்தது, குமரெட்டியாபுரம் மக்கள் தான். அதன்பிறகு, சுற்று வட்டாரத்தில் உள்ள 13 கிராமங்களை சேர்ந்த மக்களும் போராட்டத்தை தொடங்கினர். 100 நாட்கள் வரை அமைதியாக நீடித்த இந்த போராட்டம், கடந்த மே 22ம் தேதியன்று 13 பேரின் உயிர் பலியோடு மிகப்பெரிய கலவரத்தில் முடிந்தது.

தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்துக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டது. அதன் தாக்கம் அந்தக் குழுமத்தின் தலைமையிடமான இங்கிலாந்து வரை எதிரொலித்தது. லண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா நிறுவனத்தை வெளியேற்றுமாறு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் அளவுக்கு பிரச்சினை எழுந்தது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு கிராம மக்களும் மாநில சட்டப் பணிகள் ஆணையம் மற்றும் ஆட்சியரிடம் தற்போது அளித்து வரும் மனுக்கள் மூலம் கலவரத்தின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகத் துவங்கியுள்ளன. ஒட்டுமொத்த கிராம மக்களும் கலவரத்துக்கு காரணமாக கை நீட்டுவது இடதுசாரி அமைப்பான 'மக்கள் அதிகாரம்' மற்றும் அதன் நிர்வாகிகளைத் தான். போராட்டத்தை தாங்கள் முன்னின்று நடத்துவதாகவும் தங்களுடன் இருந்தால் மட்டும் போதும் எனவும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கூறியதாகவும், ஆனால், 22ம் தேதியன்று போராட்டம் ஆரம்பித்தபோதும், கலவரம் வெடித்தபோதும் அந்த அமைப்பினர் யாருமே எங்களோடு இல்லை எனவும் திரேஸ்புரம் மக்கள் கூறியுள்ளார்கள். தங்களை மூளைச் சலவை செய்து போராட்டத்தில் ஈடுபட வைத்த அவர்களால், கலவரத்தின் ஒரு அங்கமாக மாறும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டதாக திரேஸ்புரம் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுபோல,  மடத்தூர், தெற்கு வீரபாண்டிய புரம் உள்ளிட்ட மற்ற கிராம மக்களும் இதே குற்றச்சாட்டுகளை ஆட்சிரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருக்கின்றனர். தங்களுக்கு சட்ட உதவி செய்வதாக கூறிய, மக்கள் அதிகாரம் அமைப்பினர், மே 22ம் தேதியன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் வகையில் வலுவான போராட்டம் நடத்த வேண்டும் என கூறியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மே 20ம் தேதியன்று சமாதான பேச்சு நடத்திய காவல் கண்காணிப்பாளர், ஒரு பள்ளியில் அமைதி வழி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கூறியதை கிராம மக்கள் ஒப்புக் கொண்ட பிறகும், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் வந்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டால் தான் தீர்வு கிடைக்கும் என மூளைச் சலவை செய்ததால் 22ம் தேதியன்று பேரணியாக சென்றதாக கூறியுள்ளனர் .கலவரம் நடந்த இடத்துக்கு தங்களின் பேரணி செல்லும் முன்பே, அங்கு கலவரம் வெடித்ததாகவும் அதனால் தங்களுக்கு கலவரத்தில் தொடர்பில்லை எனவும் மடத்தூர், தெற்கு வீரபாண்டிய புரம் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள டி.ஜி.பி. ராஜேந்திரன், கலவரத்தின் போது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடிய கூட்டத்தை கலைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்குள் இருந்த 277 ஊழியர்கள் மற்றும் ஸ்டெர்லைட் குடியிருப்பில் இருந்த 150 குடும்பங்களை காப்பாற்றவுமே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறியிருக்கிறார். Next Story

மேலும் செய்திகள்