யார் இந்த தனுஸ்ரீ தத்தா?

பிரபல நடிகர் நானா படேகர் மீது, பாலியல் புகாரை நடிகை தனுஸ்ரீ கூறியுள்ளதன் பின்னணியை பதிவு செய்கிறது.
யார் இந்த தனுஸ்ரீ தத்தா?
x
* நடிகை தனுஸ்ரீ தத்தா, 2005-ம் ஆண்டு, 'ஆசிக் பனாயா ஆப்னே' என்ற இந்தி படத்தின் மூலம்  அறிமுகம் ஆனார். பல்வேறு படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து பிரபலம் ஆனார். தமிழில், நடிகர் விஷாலுடன், 'தீராத விளையாட்டு பிள்ளை'யில் நடித்திருந்தார். 

* சமீபத்தில், 'சாக்லேட்: டீப் டார்க் சீக்ரெட்ஸ்' படம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு, தனுஸ்ரீ பேட்டியளித்தார். அப்போது, அந்த பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, ஆடைகளை களைந்து நடனமாட வற்புறுத்தியாக கூறினார். ஆனால், நடிகர் இர்பான் ஜென்டில்மேன்... அவர் உடனடியாக நிறுத்துமாறு கூறினார் என்றும், சுனில் ஷெட்டி கண்டனம் தெரிவித்தார் என்றும் சுட்டிக் காட்டினார்.

* 'நல்லவர்கள் இருக்கிறார்கள்' என்று கூறிய அவர், அப்போது தான், நடிகர் நானா படேகர், நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா மீது புகார் கூறினார். 10 ஆண்டுகளுக்கு முன்பு, 'ஹார்ன் ஒகே பிளீஸ்' என்ற படப்பிடிப்பின் போது, நானா படேகர் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்குதலில் ஈடுபட்டார் என்று கூறினார். 'ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் தங்கள் படங்களில் நானா படேகரை நடிக்க வைக்கக்கூடாது' என்றும் தெரிவித்தார்.

* இந்த விவகாரத்தில்  மகாராஷ்டிரா அமைச்சர் தீபக் கேசர்கர் நானா படேகருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  தனுஸ்ரீ தத்தா ஏன் இத்தனை வருடங்கள் அவர் மீது புகார் செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். நடிகைகள் பிரியங்கா சோப்ரா, டுவிங்கிள் கன்னா உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலர் தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

* இதுகுறித்து, தனுஸ்ரீ  தத்தா, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் சங்கத்தில் புகார் கூறியிருந்தார். ஆனால், உதவ முடியாது என, சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

* 2008-ம் ஆண்டில், தனுஸ்ரீ தத்தா புகார் அளித்திருந்தார். ஆனால் அப்போதைய சங்க நிர்வாகம் புகார் மீது நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. ஆனால், 3 ஆண்டுகளுக்கு மேல் ஆன பழைய சம்பவத்தை விசாரிக்க தங்களது சங்க விதிமுறைகளில் வழியில்லை. எனவே நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு தங்களால் உதவ முடியாது என்று சங்கம், கூறிவிட்டது. 

* இந்நிலையில், இந்த புகாருக்குப் பின் 'மீ டூ' (Me too) மூமென்ட் தற்போது, வெளிநாடுகளைப் போல், இந்தியாவிலும் தொடங்கப்பட்டுள்ளது.  பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள், 'எனக்கும் நேர்ந்தது' என்கிற வகையில், பாலியல் தொல்லை கொடுத்தவர்களை குறித்து வெளிப்படையாக எழுதத் தொடங்கினார்கள்.

* இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, "பெண்களுக்கு எந்த வகையான பாலியல் தொந்தரவுகளையும் அனுமதிக்க முடியாது. சமூக ஊடகத்தில் 'ஷி பாக்ஸ்' (SHe box) என்ற ஒன்றை முதன்முதலாக அரசே தொடங்கியுள்ளது. பெண்கள், தமக்கு நிகழ்ந்துள்ள பாலியல் தொந்தரவுகள் குறித்து எழுதலாம், அந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று  கூறியுள்ளார். 

* தனுஸ்ரீயின் பாலியல் புகார், காலம்  கடந்தும் பாலிவுட்டில் புயலைக் கிளப்பியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்