பெரம்பலூரில், மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த தந்தையை, மகனும், தாயும் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி மலர்கொடி கணவனிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், ராமகிருஷ்ணனின் மகன் வெங்கடேஷ், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமகிருஷ்ணன், வெங்கடேசனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தடுமாறி கீழே விழுந்த ராமகிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த வெங்கடேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மலர்கொடி மற்றும் வெங்கடேசனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.