அரிசியின் அளவை விட சிறிய அதிசயம்... பிஞ்சுகளை காக்க வந்த பிரம்மாஸ்திரம்
பிறவியிலேயே இதய கோளாறுகள் கொண்ட குழந்தைகளின்
உயிரை காக்கும் உலகிலேயே மிகச்சிறிய பேஸ்மேக்கரை
உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இதன் முக்கியத்துவம், சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.
ஒற்றை அரிசியின் அளவை விட உலகின் மிகச்சிறிய பேஸ்மேக்கரை அமெரிக்காவின் நார்த்வெஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனை அறுவை சிகிச்சை இல்லாமலேயே ஊசியின் மூலம் உடலுக்குள் செலுத்த முடியும்.
இது 3.5 மில்லி மீட்டர் நீளமும், 1.8 மில்லி மீட்டர் அகலமும்,
1 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டது. அனைத்து வயதினரின் இதயத்திற்கும் பொருந்தக் கூடியது என்றபோதிலும், பிறவியிலேயே இதயக்கோளாறு கொண்ட குழந்தைகளுக்கு இதன் செயல்திறன் மிகவும் பயனளிக்கும் என்கின்றார், வடிவமைப்பு குழுவின் தலைமை பொறியாளர் John A Rogers.
"குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைகளுக்கு தற்காலிக பேஸ்மேக்கர்களின் தேவை மிக முக்கியமானது. அதே நேரம்,
சிறியதாக இருப்பதும் அவசியம் என்பதால் இது உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் பயன்படுத்தப்படும் தற்காலிக பேஸ்மேக்கரை பொருத்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. வயர்களைக் கொண்டு இணைத்து அதற்கு
மின்னூட்டம் அளிக்கப்படுகிறது. பேஸ்மேக்கர் இனி தேவையில்லை என்ற சூழலில், அதனை அப்புறப்படுத்தும்போது, இதய தசைகள் சேதமாகும் அபாயம் நிலவுகிறது.
ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் அரிசி
அளவிலான உலகின் மிகச்சிறிய பேஸ்மேக்கர் வயர்லெஸ் என்பதால், அதன் பயன்பாடு தேவையில்லை என்ற சூழலில்
அது உடலுக்குள்ளேயே கரைந்துபோய்விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நோயாளியின் நெஞ்சுப்பகுதியில் பொருத்தப்படும் டிவைஸ் உடன் இணைக்கப்பட்டு, அதிலிருந்து வெளிவரும் அகச்சிவப்புக் கதிர்களின் ஆற்றல் இதய துடிப்பு குறையும் சமயங்களில்
அதன் செயல்பாட்டைத் தூண்டுகிறது.
புதிதாக பிறக்கும் 100 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே இதய குறைபாடு இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு 7 நாட்களில் தானாகவே சரியாகிவிடும் என்பதால் தற்காலிக பேஸ்மேக்கர் மட்டுமே தேவைப்படுகிறது என்கிறார்கள் இதயவியல் நிபுணர்கள்.
எனவே, அறுவை சிகிச்சை இல்லாமலேயே பொருத்தக்குடிய,
இந்தப் புதிய சின்னஞ்சிறு பேஸ்மேக்கர், லட்சக்கணக்கான குழந்தைகளின் உயிர்காக்க வந்த உன்னத சாதனம் என்றும் சர்வதேச மருத்துவர்கள் சிலாகிக்கின்றனர்.