"உலக தொடர்பே கூடாது.. பரிசுத்த ஆவியால் வழி நடத்தப்படும்" புதிய போப்பை தேர்வு செய்யும் இந்தியர்கள்
"உலக தொடர்பே இருக்க கூடாது..பரிசுத்த ஆவியால் வழி நடத்தப்படும்"புதிய போப்பை தேர்வு செய்யும் இந்தியர்கள்
யார் புதிய போப் ஆண்டவர்? புதிய போப்பை தேர்வு செய்யவிருக்கும் இந்திய கார்டினல்கள் யார்? என்பதை விரிவாக பார்க்கலாம்.140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார்.வழக்கமாக போப்பாக இருப்பவர் மறைந்த 15, 20 நாட்களில் புதிய போப்பை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கும்.இப்போது புதிய போப்பை தேர்வு செய்யவிருக்கும் சூழலில், யார் போப் ஆகலாம் என்றால்? என்று கேட்டால், ஞானஸ்நானம் பெற்ற கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எந்தஒரு ஆணும் போப்பாக தேர்வு செய்யப்படலாம்.ஆனால் பெரும்பாலும் கத்தோலிக்க திருச்சபையில் கார்டினல் பொறுப்பில் இருப்பவர்களே போப்பாக தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். போப் ஒருவரை தேர்வு செய்ய பல நூற்றாண்டு காலமாகவே பாரம்பரிய நடைமுறை இருக்கிறது.போப்பை தேர்வு செய்ய ரகசியமாக வாக்கெடுப்பு நடைபெறும். போப்பை தேர்வு செய்பவர்கள் கார்டினல்கள் என்று அழைக்கப்படும் மூத்த மதகுருமார்கள் ஆவார்கள்.அவர்களே வாக்களிப்பார்கள். உலகம் முழுவதும் 90 நாடுகளில் 252 காடினல்கள் உள்ளனர்.இவர்களில் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்க முடியும். அந்த வகையில் வாடிகன் தரவுகள் படி 135 கார்டினல்கள் புதிய போப்பை தேர்வு செய்ய தகுதி பெற்றிருக்கிறார்கள். இந்தியாவில் 6 காடினல்கள் உள்ளார்கள். அவர்களில் 4 பேர் அதாவது 80 வயதுக்கு உட்பட்ட 4 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள்.
கோவா, டாமன் பேராயராக இருக்கும் 72 வயதாகும் பிலிப் நேரி பெராவ், கேரள மாநிலம் சைரோ மலங்கரா கத்தோலிக்க திருச்சபை பேராயராக இருக்கும் 64 வயதாகும் பசேலியாஸ் கிளிமீஸ், 63 வயதாகும் ஐதராபாத் பேராயரான ஆண்டணி போலா, கேரளாவின் சங்கனாச்சேரியை சேர்ந்த 51 வயதாகும் பேராயர் ஜார்ஜ் ஜேக்கப் ஆகியோர் போப்பை தேர்வு செய்வார்கள். வாடிகனில் புதிய போப்பை தேர்வு செய்வதற்கான மாநாட்டில் பங்கேற்கும் கார்டினல்கள், முதலில் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் திருப்பலி மேற்கொள்வார்கள். பின்னர் அவர்கள் வாடிகன் சிஸ்டைன் தேவாலயத்தில் கூடுவார்கள். அவர்கள் வாடிகனில் தங்க வைக்கப்படுவார்கள். வாடிகனைவிட்டு அவர்கள் வெளியே வரக்கூடாது.
வானொலியை கேட்கக் கூடாது, தொலைக்காட்சி பார்க்க கூடாது, செய்தித்தாள் படிக்க கூடாது, யாருடனும் தொலைபேசியில் பேசக்கூடாது. அதேபோல யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற பிரசாரமும் செய்யக்கூடாது.அப்போது, உலக தொடர்பிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் கார்டினல்கள் பரிசுத்த ஆவியால் வழி நடத்தப்படுகிறார்கள் என சொல்கிறது வாடிகன். புதிய போப்பை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு சிஸ்டைன் தேவாலயத்தில் நடைபெறும். இந்த தேர்தல் போப் ஒருவரை தேர்வு செய்யும் வரையில் தொடரும்.
ஒரு கார்டினலுக்கு ஒரு வாக்கு. ஒவ்வொரு கார்டினலும் Eligio in Summum Pontificem என்ற வாசகம், அதாவது கத்தோலிக்க திருச்சபையின் உச்ச தலைவரை தேர்வு செய்கிறேன் என்ற வாக்குச்சீட்டில் விரும்பும் நபரது பெயரை எழுத வேண்டும். புதிய போப்பாக ஒருவரை தேர்வு செய்ய மூன்றில் இரண்டு பங்கு வாக்கு அவசியம்.இந்த பெரும்பான்மையை பெறும் வரையில் தேர்தல் நடத்தப்படும். தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டு எரிக்கப்படும். எரிக்கும் புகை சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளிவரும்.அப்போது வெள்ளை நிற புகை வெளியேறினால் போப் தேர்வு செய்யப்பட்டுவிட்டார் எனவும் கருப்பு நிற புகை வெளியேறினால் போப் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்பதும் பொருள். அப்படி போப் தேர்வு செய்யப்படவில்லை என்றால் தேர்தல் தொடரும்.
கருப்புப் புகையை உருவாக்க வாக்குச்சீட்டுகளை எரிப்பதற்கு முன்பாக அதில் பொட்டாசியம் பெர்க்ளோரேட், ஆந்திராசீன் ரசாயனம் தடவப்படும். வெள்ளைப்புகையை உருவாக்க வாக்குச்சீட்டில் பொட்டாசியம் க்ளோரேட், லேக்டோஸ், ரோஸின் ரசாயனம் தடவப்படுகிறது.புதிய போப்பை தேர்வு செய்யும் இந்த நடைமுறை பல நாட்களும் ஆகலாம்... சில நேரங்களில் வாரங்களும் ஆகலாம். சமீபத்திய ஆண்டுகளில் கடந்த 1922 ஆம் ஆண்டு 5 நாட்கள் தேர்தல் நடைபெற்றது.போப் தேர்வு செய்யப்பட்டதும், செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவுக்கு வெளியே கூடியிருக்கும் மக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படும். புதிய போப் அறிமுகம் செய்யப்படுவார். பிறகு மாநாட்டில் ஒவ்வொரு சுற்று வாக்கெடுப்பு முடிவும், போப்பிற்கு காட்டப்பட்டு, சீல் வைக்கப்பட்டு வாடிகன் காப்பகத்தில் வைக்கப்படும், பிறகு போப் உத்தரவு பெயரிலேயே அதை திறக்க முடியும்.
இத்தாலியை சேர்ந்த 70 வயதாகும் பியட்ரோ பரோலின் (Pietro Parolin) அடுத்த போப்புக்கான போட்டியில் முன் வரிசையில் இருப்பதாக கூறப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு முதல் பிரான்சிஸின் மாநில செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் துணை போப் என்றே அழைக்கப்படுவர். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 67 வயதாகும் லூயிஸ் டேகிள் (Luis Tagle), ஆப்பிரிக்க நாடான கானாவை சேர்ந்த பீட்டர் டர்க்சன் (Peter Turkson), ஹங்கேரியை சேர்ந்த பீட்டர் எர்டோ ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
இத்தாலியை சேர்ந்த மேட்டியோ ஜூப்பி (Matteo Zuppi), போர்ச்சுக்கல்லை சேர்ந்த ஜோஸ் டோலண்டினோ, மால்டாவை சேர்ந்த மரியோ கிரெச், இத்தாலியை சேர்ந்த பியர்பட்டிஸ்டா பிஸ்ஸாபல்லா (Pierbattista Pizzaballa) ஆகியோர் புதிய போப் ரேசில் முன்வரிசையில் இருப்பவர்கள் என்று பார்க்கப்படுகிறது.ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு புதிய தலைவரை, அதாவது புதிய போப்பாக யார் தேர்வு செய்யப்பட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.