தஞ்சை தனியார் நகைக்கடை உரிமையாளர் பல கோடி மோசடி செய்து தலைமறைவு - கதறும் பெண்கள்

Update: 2025-07-25 11:25 GMT

பழைய நகைகளை கொடுத்தால் புதியதாக செய்து தருவதாக கூறி

தஞ்சை தனியார் நகைக்கடை உரிமையாளர் பல கோடி மோசடி செய்து தலைமறைவு

நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் மனு

தஞ்சாவூர் சீனிவாசபுரத்தில் பல ஆண்டுகளாக மலேசியா சுந்தரம் தனியார் நகைக்கடை இயங்கி வந்தது. வீடும் அதன் அருகிலேயே இருந்தது. இந்த கடையில் சீட்டு பணம், பழைய நகைகளை கொடுத்தால் அதே எடையில் குறைந்த செய்கூலி , சேதாரத்தில் புதிய டிசைனில் நகைகள் செய்து கொடுப்பது, நகைகளாக கொடுத்தால் அதனை ஆபரணங்களாக செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்த நகைக்கடையில் இருந்து வந்தது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் மேற்கண்ட திட்டத்தில் இணைந்தனர். இதற்காக சீட்டு பணம் கொடுத்தல், பழைய நகைகளை கொடுத்தல், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு நகைகளை திருப்பிக் கொடுக்கவில்லை. மேலும் கட்டிய சீட்டு பணங்களுக்கு உரிய நகைகளும் கொடுக்கவில்லை . இதனால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் பலர் தொடர்ந்து நகைக்கடை உரிமையாளிடம் கொடுத்த நகைகளை திருப்பிக் கொடுக்குமாறு முறையிட்டனர். அதற்கு காலம் தாழ்த்தி வந்தார் ‌. இந்த நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு நகைக் கடை மற்றும் வீடு ஆகியவற்றை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரித்த போது அவர் எங்கு தலைமறைவானார் என்ற விவரம் தெரியவில்லை.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 85-க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று தஞ்சாவூா் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நகை, பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் செய்தனர்.

அந்த புகாரில் மலேசியா சுந்தரம் நகைக்கடை உரிமையாளர் ராஜா பலரை ஏமாற்றி தலைமறைவாகிவிட்டார். சுமார் ரூ.50 கோடிக்கும் மேல் அவர் மோசடி செய்துள்ளார். இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர் மோசடி செய்த பணத்தின் மதிப்பு இன்னும் பல கோடியை எட்டும். எனவே தலைமறைவான ராஜாவை பிடித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . நாங்கள் கொடுத்த வெள்ளி, தங்க நகைகளை மீட்டு தர வேண்டும். சீட்டிற்காக செலுத்திய பணத்தையும் மீட்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள்என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்