சிவகங்கை குவாரி விபத்து | விடிய விடிய நடந்த மீட்பு பணி

Update: 2025-05-21 03:09 GMT

குவாரி விபத்து - 5 தொழிலாளர்கள் பலி - நிவாரணம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்த நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கிய ஒரிசா இளைஞரின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கம்புணரி அருகே உள்ள மல்லாக்கோட்டையில் தனியார் குவாரியில் 400 அடி பள்ளத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாய்வு பாதையில் பொக்லைன் இயந்திரம் சென்றபோது, பள்ளத்தில் திடீரென மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் பொக்லைன் இயந்திர ஓட்டுனரான ஒடிசாவை சேர்ந்த இளைஞர் ஹர்ஜித், பொக்லைன் இயந்திரத்தோடு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி உயிரிழந்த ஆண்டிச்சாமி, கணேசன் 2 பேரின் சடலங்கள் மீட்டனர். ஆனால் வட மாநில தொழிலாளியின் உடலை மீட்க முடியவில்லை. அதே நேரத்தில் படுகாயங்களுடன் முருகானந்தம், ஆறுமுகம், மைக்கேல் ஆகிய 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் முருகானந்தம் மற்றும் ஆறுமுகம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மைக்கேலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து விபத்து குறித்து தகவலறிந்து குவாரி முன் திரண்ட தொழிலாளர்களின் உறவினர்கள் கதறி அழுத காட்சி அனைவரையும் கண் கலங்க வைத்தது.

விபத்து குறித்து தங்களுக்கு முறையாக தகவல் அளிக்கப்படவில்லை என இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், மழையின் காரணமாக பாறை சரிந்து விழுந்ததாகவும், இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். அதே நேரத்தில், 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் வலியுறுத்தினார்.

இதனையடுத்து, இடிபாடுகளில் சிக்கிய ஓடிசா இளைஞர் ஆர்ஜீத்தை மீட்க, நெல்லை ராதபுரத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் சம்பவ இடத்திற்கு சென்றனர். ராட்சச ஜெனரேட்டர், வெடி மருந்துகள், பாறைகளை உடைக்கும் கருவிகள் உட்பட பல அதிநவீன இயந்திரங்களும், ராட்சத மின் விளக்குகள் உதவியுடன் விடிய விடிய மீட்பு பணி நடைபெற்றது.

இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக குவாரிக்குள் அதிகாரிகளை தவிர யாரும் அனுமதிக்கப்படாமல் குவாரி பூட்டப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றன. விபத்து குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குவாரி விபத்தில் 5 பேர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்