போலீஸ் குடியிருப்புக்கு எதிரிலே துணிகரம்.. போலீஸ் மூளைக்கு சவால் விடும் மர்ம வழக்கு
ஓமலூர் அருகே போலீஸ் குடியிருப்புக்கு எதிரே உள்ள நகைக் கடையின் சுவற்றைத் துளையிட்டு தங்கம், வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள தீவட்டிபட்டி பழைய காவல் நிலையம் மற்றும் போலீசார் குடியிருப்புக்கு எதிரே கார்த்திக் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.
வழக்கம் போல உரிமையாளர் கார்த்தி கடையை திறந்து பார்த்தபோது கடைக்குள் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தும் மாயமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு உள்ளே வந்த திருடர்கள் அங்கிருந்த 30 கிராம் தங்கம், 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அள்ளிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். நள்ளிரவில் போலீஸ் குடியிருப்புக்கு எதிரே உள்ள நகைக்கடையின் சுவரை துளையிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.