இந்தியா வருகிறார் மெஸ்ஸி - ரசிகர்களுக்கு ட்ரீட்
அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து நட்சத்திரம் லியோனெல் மெஸ்ஸி, இந்தியா வந்து விளையாட இருப்பது உறுதியாகி உள்ளது.
கால்பந்து ரசிகர்கள் உயிர்மூச்சாகக் கருதும் பெயர்... கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்த பெயர்....
கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பையை வென்று மெஸ்ஸியின் பெருங்கனவு நனவானபோது, உலகமே அவரை உச்சந்தலையில் தூக்கிக் கொண்டாடியது.
கால்பந்து களத்தில் பல மாயங்களை நிகழ்த்திய மெஸ்ஸிக்கு இந்தியாவிலும் மாபெரும் ரசிகர் பட்டாளம் உண்டு...
அர்ஜென்டின வீதிகளில் மட்டுமல்ல... இந்திய வீதிகளிலும் மெஸ்ஸி ஜெர்சியை அதிகம் காணலாம்...
இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் மெஸ்ஸி ரசிகர்ளின் நெடுநாள் விருப்பம் நிறைவேறும் விதமாக ஒரு அப்டேட் வெளியாகி இருக்கிறது.
ஆம்... இந்தியா வருகை தந்து மெஸ்ஸி விளையாடப் போவது தற்போது உறுதியாகி உள்ளது. வருகிற நவம்பர் மாதம் கேரளாவில் நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் மெஸ்ஸி விளையாட இருப்பதாக அர்ஜென்டினா கால்பந்து சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை கேரள விளையாட்டுத்துறை அமைச்சரும் உறுதிப்படுத்தி இருப்பதால் மெஸ்ஸி ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.