``ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு..என்ன அடிச்சாங்க'' - குற்றஞ்சாட்டிய தமிழரசன்..கலெக்டர் விளக்கம்
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிய ரீதியாக தன்னை ஒதுக்கி விட்டு மாடு பிடிப்பதற்கான அனுமதி அளிக்கவில்லை என்றும் காவல்துறையினர் தாக்கியதாக கூறியும் தமிழரசன் என்ற மாடுபிடி வீரர் குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பத்தில் இனம், மதம் போன்ற எவ்வித விவரங்களும் கோரப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழரசனின் டோக்கன் எண் 204 என்றும் அவர் போட்டிக்கு தாமதமாக வந்ததால் 9வது சுற்றில் களமாட இருந்தாகவும் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 8வது சுற்று முடிக்கப்பட்ட போது மழை மற்றும் நேரமானதால் இறுதியாக சிறந்த மாடுபிடி வீரர்களுக்கான சுற்று மட்டும் நடத்தப்பட்டு, 9வது சுற்று நடத்தப்படாமல் நிகழ்ச்சி முடிக்கப்பட்டதாகவும் , தமிழரசன் குறிப்பிட்டுள்ளது உண்மைக்கு புறம்பானவை என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.