Gold Rate | Gold News | டிரம்ப் எடுத்த அதிரடி முடிவுகள் - தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்
2026-ல் தங்கம் விலை இதுவரையில் இல்லாத புதிய உச்சத்தை எட்டி அதிர்ச்சியளித்திருப்பது குறித்து விரிவாக காணலாம்
2025 ஆம் ஆண்டில் 70 சதவீதம் விலையேற்றம் கண்ட தங்கம், 2026 ஆம் ஆண்டிலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.
ஞாயிற்று கிழமை கிராம் ஆபரணத் தங்கம் 12 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையானது. சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 200 ரூபாயாக இருந்தது. தொடர்ச்சியாக.... ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 220 ரூபாய் ஏற்றம் கண்டு 13 ஆயிரத்து 120 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாயானது.
இது தங்கம் விலை வரலாற்றில் எட்டாத புதிய உச்சமாகும். இதற்கு முன்னதாக டிசம்பர் 27 ஆம் தேதி தங்கம் விலை அதிகப்பட்சமாக சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையானது. அதற்கு பிறகு தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருந்த சூழலில் ஜனவரி ஒன்றாம் தேதி சவரன் ஆபரணத் தங்கம் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. 2026 ஆம் ஆண்டு தொடங்கி 12 நாட்களில் மட்டும் சவரன் ஆபரணத் தங்கம் விலை 5 ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்துள்ளது.
பொதுவாகவே உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல் தங்கம் விலையில் எதிரொலிக்கிறது. வெனிசுலாவை அடுத்து, கிரீன்லாந்து, ஈரானை அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிவைக்க, முதலீட்டாளர்கள் பார்வை பாதுகாப்பான முதலீடாக தங்கம் பக்கம் இருக்கிறது.அமெரிக்க பெட்ரல் வங்கியும் டாலருக்கான வரியை குறைவைத்து வருகிறது.
டிசம்பரில் அமெரிக்காவில் எதிர்பார்த்த வேலைவாய்ப்பு இல்லாததால் அமெரிக்க பெட்ரல் வங்கி மீண்டும் வட்டியை குறைக்கலாம் என்றே கணிக்கப்படுகிறது. அதுபோக அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவல்-க்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. அமெரிக்க பெடரல் வங்கி தலைவருக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் குற்றவியல் விசாரணையை தொடங்கியிருப்பதால் டாலரில் இருந்து முதலீட்டாளர்கள் தங்கம் பக்கம் திரும்புவதும் அதிகரித்திருக்கிறது.
இதனால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்றே கணிக்கப்படும் வேளையில், 2026-ல் சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தாண்டி செல்லும் என சொல்கிறார் தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி. அதேவேளையில் தங்கத்தைவிடவும் வெள்ளி விலை உயர்வு விகிதம் அதிகமாக இருக்கும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
தங்கம் விலை மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வேளையில், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல் தொடர்ந்து மோசமாகும் வேளையில், அமெரிக்க டாலருக்கு தொடர்ந்து வட்டி குறைக்கப்பட்டால் 2026-லிலும் தங்கம் விலை ஏற்றம் தொடரும் என்பதே வல்லுநர்கள் கணிப்பாக இருக்கிறது.