கஞ்சா கருப்புக்கு கிடைத்த வெற்றி - சிக்கலில் போரூர் அரசு டாக்டர்கள், செவிலியர்கள்
சென்னை போரூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததை கண்டித்து பொதுமக்களுடன் இணைந்து நடிகர் கஞ்சா கருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சின்ன போரூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில், காலை 7 மணி முதல் 10 மணி வரை சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகள், மருத்துவர் இல்லாததால் காத்திருந்துள்ளனர். அவர்களுடன் கால் வலிக்கு சிகிச்சை எடுக்க வந்த நடிகர் கஞ்சா கருப்பும், மருத்துவர் இல்லாதது குறித்து ஊழியர்களிடம் கேட்டுள்ளார். மருத்துவமனை தரப்பில் முறையான பதில் தெரிவிக்கப்படாததால் பொதுமக்களுடன், கஞ்சா கருப்பும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இப்போராட்ட எதிரொலியால், சென்னை மாநகராட்சி விசாரணையை தொடங்கியது. இந்த விவகாரத்தை அடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டு உள்ளார். மேலும், இது குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு பணியில் இல்லாத சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.