மெரினா கடற்கரையில் நீலக்கொடி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 5.60 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் பணிகளை விரைவில் முடித்து, டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை வழங்கும் நீலக்கொடி சான்றிதழ் விரைவில் பெறப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. சென்னை மெரினா, திருவான்மியூர் உள்ளிட்ட 6 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான கட்டமைப்புகளை அந்த கடற்கரைகளில் ஏற்படுத்தும் பணிகளும் வேகமெடுத்துள்ளன.