Wpl 2026 Auction | உலகக்கோப்பை நாயகிக்கு குவிந்த கோடிகள் - எந்தெந்த அணியில் யார்? யார்?
மகளிர் பிரீமியர் லீக் 2026க்கான மெகா ஏலத்தில் முக்கியமான வீராங்கனைகளின் முதல் சுற்று ஏலம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் அதிக தொகை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட வீராங்கனை யார்? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்...
UP வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என ஐந்து அணிகளை கொண்ட மகளிர் பிரீமியர் லீக் 2026க்கான ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றது..
இதில் முன்னணி கிரிக்கெட் வீராங்கனைகளான இந்தியாவின் தீப்தி சர்மா, ரேணுகா சிங் மற்றும் நியூசிலாந்தின் சோஃபி டெவின், அமெலியா கெர் மற்றும் ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி , மெக் லானிங் மற்றும் இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் ஆகிய எட்டு வீராங்கனைகளுடன் ஏல செயல்முறை தொடங்கியது.
இதில் முதல்முறையாக Right-to-match கார்டை பயன்படுத்தி உபி வாரியர்ஸ் அணி மீண்டும் தீப்தி சர்மாவை 3.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
இதன் மூலம் மகளிர் ஐபிஎல் வரலாற்றிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு பிறகு அதிகபட்ச விலைக்கு ஏலம் போன இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தீப்தி ஷர்மா பெற்றுள்ளார்.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் அமீலியா கெர்-ஐ மூன்று கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் வாங்கிய நிலையில்,நியூஸிலாந்து அணியின் மற்றொரு நட்சத்திர வீராங்கனையான சோஃபி டெவின்-ஐ இரண்டு கோடி ரூபாய் கொடுத்து குஜராத் ஜெயண்ட்ஸ் வாங்கியது.
அதேபோல் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ஆஸ்திரேலியா வீராங்கனை மெக் லானிங்கை உபி வாரியர்ஸ் 1.9 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இதில் அண்மையில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய ரசிகர்களை கவர்ந்த தென் ஆப்பிரிக்கா வீராங்கனை ஆன லாரா வோல்வார்ட்டை 1.1 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் வாங்கியது.
உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன்-ஐ 85 லட்ச ரூபாய்க்கு உபி வாரியர்ஸ் தக்க வைத்துக் கொண்டது.
இந்திய வேகப்பந்து வீச்சாளரான ரேணுகா சிங் 60 லட்சம் ரூபாய்க்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்குச் சென்றார்.
காயம் காரணமாக இந்த ஆண்டு மகளிர் ஐபிஎல்லில் இருந்து விலகி இருந்த ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனையான அலிசா ஹீலியை எந்த அணியும் வாங்க முன் வராதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது