ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூருவுக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடிய சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 52-வது ஆட்டத்தில் சென்னை பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணியில் பெத்தேல் 55 ரன்களும், விராட் கோலி 62 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய ஷெப்பர்டு 14 பந்துகளில் அரைசதம் விளாசி அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார். அவர் அடித்த அரைசதம் ஐபிஎல் தொடரில் 2வது அதிவேக அரைசதமாக பதிவானது. 20 ஓவர் முடிவில், பெங்களூரு அணி 213 ரன்களை எடுத்திருந்தது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி சேஸிங்கை தொடங்கிய விதமும் அதை முன்னெடுத்த சென்ற விதமும் அத்தனை ஆச்சர்யமாக இருந்தது. குறிப்பாக, ஓப்பனரான இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவும், ஜடேஜாவும் ஆடிய ஆட்டம்தான் சிஎஸ்கேவின் மீது நம்பிக்கையை கொடுத்தது. இருவரும் இணைந்து 114 ரன்களை 10.4 ஓவர்களில் அடித்திருந்தனர். இதில் ஆயுஷ் மாத்ரே 94 ரன்களும், ஜடேஜா 77 ரன்களும் எடுத்திருந்தனர்.
சேஸிங் சிறப்பாக சென்று கொண்டிருந்த போது, 17-வது ஓவரில் லுங்கி இங்கிடி வீடிய பந்தில், ஆயுஷ் மாத்ரே நடையை கட்டினார். போட்டி பரபரப்பான நிலையில், களமிறங்கிய தோனி lbw ஆனார். இதனைத்தொடர்ந்து இம்பேக்ட் பிளேயராக வந்த ஷிவம் துபேவுக்கு யாஷ் நோ-பால் வீசிய நிலையில் துபே ஒரு சிக்சரை அடித்தார். ஆனாலும் சென்னையால் டார்கெட்டை எட்ட முடியவில்லை. கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது, ஜடேஜாவும், துபேவும் சிங்கிள் எடுத்ததன் விளைவு, 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றது.