"பாக்.வேண்டாம்" உறுதி காட்டிய இந்தியாவுக்காக மாறிய முடிவு-தோல்விக்கு பழிதீர்க்க ரெடியானது ரோகித் படை

Update: 2025-01-19 05:49 GMT

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.... எப்போது சாம்பியன்ஸ் டிராபி தொடங்குகிறது??... யாரெல்லாம் அணியில் இடம்பிடித்துள்ளார்கள்??... பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

2013ம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்று சாம்பியன்களின் சாம்பியன் ஆனது இந்தியா...

ஆனால் 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது.

2017ம் ஆண்டுடன் சாம்பியன்ஸ் டிராபிக்கு முடிவுரை எழுதிய ஐசிசி, தற்போது சுமார் 8 வருடங்களுக்கு பிறகு அந்த தொடருக்கு புத்துயிர்ப்பு கொடுத்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் பாகிஸ்தானில் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர், மார்ச் 9ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தானுக்கு செல்ல பிசிசிஐ விடாப்பிடியாக மறுத்ததால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன.

குரூப் ஏ பிரிவில் பிப்ரவரி 20ல் வங்கதேசம்... பிப்ரவரி 23ல் பாகிஸ்தான்... மார்ச் 2ல் நியூசிலாந்துடன் இந்தியா மல்லுக்கட்ட உள்ளது.

இத்தகைய சூழலில் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டனாக ரோகித் சர்மா தொடர்கிறார். துணைக் கேப்டனாக தொடக்க வீரர் சுப்மன் கில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். பேட்டர்கள் வரிசையில் விராட் கோலி, ஷ்ரேயாஷ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ரிசர்வ் ஓபனராக ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் வரிசையை ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் அலங்கரிக்கின்றனர்.

பவுலர்கள் வரிசையில் china man குல்தீப் யாதவ், காயத்தில் இருந்து குணமடைந்த முகமது ஷமி, நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா, இளம் பவுலர் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்துள்ளனர்.

இதே அணிதான் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பங்கேற்க உள்ளது. பும்ராவின் உடல்நலனை கருத்தில்கொண்டு ஹர்ஷித் ராணா கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் கலக்கிய கருண் நாயருக்கு அணியில் இடமில்லாமல் போனது எதிர்பார்த்த ஒன்றுதான். எதிர்பாராத விதமாக சிராஜூக்கு சிகப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது. சாம்சனுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக இந்திய அணி சறுக்கலை சந்தித்து வருகிறது. குறிப்பாக கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் வரலாற்றுத் தோல்விகள் வழக்கமாகி வருகின்றன.

என்றாலும் white ball கிரிக்கெட்டில் இந்தியாவின் நிலையே வேறு. அறிவிக்கப்பட்டுள்ள அணி வலிமையாக இருப்பதாகக் கூறுகின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். மூத்த வீரர்கள் மீண்டும் ஃபார்மிற்கு (form) திரும்பினால் இந்த அணி அபாயகர அடையாளத்தைப் பெற்றுவிடும்.

50 ஓவர் ஃபார்மேட்டில் (format) சொந்த மண்ணில் கைநழுவிய கோப்பையை, கைப்பற்றும் களமாக தற்போது இந்த தொடர் இந்திய அணிக்கு பார்க்கப்படுகிறது. படிந்திருக்கும் கறைகளைத் துடைத்தெறிந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிலிர்த்தெழுமா ரோகித் படை?... பொறுத்திருந்து பார்ப்போம்... 

Tags:    

மேலும் செய்திகள்