திறக்காமல் சிக்கிக்கொண்ட ஆம்புலன்ஸ் கதவால் நோயாளி உயிரிழப்பு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், ஆம்புலன்ஸ் கதவு திறக்காமல் சிக்கிக்கொண்டதால் நோயாளியின் உயிர் பிரிந்துள்ளது...
மத்திய பிரதேச மாநிலத்தில், ஆம்புலன்ஸ் கதவு திறக்காமல் சிக்கிக்கொண்டதால், உள்ளே இருந்த நோயாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சத்னா மாவட்ட மருத்துவமனைக்கு 65 வயது முதியவர் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டுள்ளார். மருத்துவமனை வாசலில் ஆம்புலன்ஸ் கதவை திறக்க முயன்றபோது, கதவு பழுதடைந்து சிக்கிக்கொண்டது. நீண்ட நேரம் முயற்சித்தும் கதவை திறக்க முடியாததால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று கதவை திறந்துள்ளார்.
இந்த நீண்ட போராட்டத்திற்கு பின் மருத்துவமனைக்குள் கொண்டு செல்லப்பட்ட முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த முதியவர் மருத்துவமனையை அடைவதற்கு முன்பாகவே உயிரிழந்துவிட்டதாக, மாவட்ட சுகாதாரத் துறை கூறியுள்ளது.