போர் விமானமும்.. மோடியின் பயணமும்.. இந்தியாவை துரத்தும் நெடுநாள் சாபம் - மீண்டும் அமெரிக்காவிடமே தஞ்சம்
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, இந்தியாவில் போர் விமான எஞ்சின்கள் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
போர் விமானங்களின் மிக முக்கிய பாகம் அதன் ஜெட் எஞ்சின் தான். அதை தயாரிக்கும் தொழில்நுட்பம் அமெரிக்கா, ரஷ்யா போன்ற ஒரு சில நாடுகளிடம் மட்டுமே உள்ளது.
இந்தியாவில், பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸில் தேஜாஸ் உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் இவை அனைத்திலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜெட் எஞ்சின்கள் பொருத்தப்படுகின்றன.
இந்தியாவில் ஜெட் எஞ்சின் தயாரிக்க இதுவரை எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள், திட்டங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது இந்தியாவில் ஜெட் எஞ்சின்கள் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் ஹிந்தாஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் இணைந்து, இந்தியாவில் GE-F414 என்ற மிக நவீன ஜெட் எஞ்சின்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த எஞ்சின் தொடர்பான தொழில்நுட்பங்களில் 80 சதவீதம் வரை இந்தியாவிற்கு அளிக்க அமெரிக்கா சம்மதிக்கும் என்று கருதப்படுகிறது.
கிரிஸ்டல் டர்பைன் பிளேடு, கம்ப்ரெசன் டிஸ்க், எரிசக்திக்கான லேசர் டிரில்லிங், தூள் உலோகவியல் தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் தயாரிக்க உள்ள எல்.சி.ஏ மார்க் 2 என்ற நவீன போர் விமானத்தில் இந்த எஞ்சின் பொருத்தப்பட உள்ளது.
ஏ.எம்.சி.ஏ என்ற ரேடர்களினால் எளிதல் கண்டு பிடிக்க முடியாத மிக நவீன போர் விமானங்களிலும் எதிர்காலத்தில் பொருத்தப்படும்.
இதன் மூலம் இந்திய விமானப் படைக்கு, நம்பகமான, நீண்ட காலம் உழைக்கும் ஜெட் எஞ்சின்கள் கிடைக்க உள்ளது.