"90 நீர் தேக்கங்களில் 69% நீர் இருப்பு" - நீர்வளத் துறை சார்பில் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் உள்ள 90 நீர்த்தேக்கங்கள் சராசரியாக 69 புள்ளி மூன்று இரண்டு சதவீத கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள நீர்தேக்கங்களின் கொள்ளளவு விவரத்தினை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 90 நீர்த்தேக்கங்கள் சராசரியாக 69 புள்ளி மூன்று இரண்டு சதவீத கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்தேக்கங்களான பூண்டி நீர்த்தேக்கம் 87 புள்ளி இரண்டு எட்டு சதவீதமும், சோழவரம் 71 புள்ளி மூன்று இரண்டு சதவீதமும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செங்குன்றம் நீர்த்தேக்கம் 83 புள்ளி ஐந்து எட்டு சதவீதமும், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் 76 புள்ளி ஒன்று ஆறு சதவீதமும், தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் 92 புள்ளி 8 சதவீதமும் நிரம்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேப்போல்,ஆண்டியப்பனூர் ஓடை, மோர்த்தனா, குண்டாறு, அடவிநயினார் கோவில், சோத்துப்பாறை, வர்மதாநதி, சோலையாறு ஆகிய நீர்தேக்கங்கள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின், நீர்தேக்கங்களின் கொள்ளளவு மேலும் உயரும் எனவும் நீர்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.