கடலூர் ஆணவ கொலை - பரபரப்பு தீர்ப்பு

கடலூரில் கடந்த 2003ல் கலப்பு திருமணம் செய்த தம்பதிகளை கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், காவலர்கள் உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நிதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2021-09-24 10:45 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் புதுப்பேட்டையில் 2003 ஆம் ஆண்டு  முருகேசன் - கண்ணகி ஆகியோர் கலப்பு திருமணம் செய்து கொள்கின்றனர்.
பின்னர் அதே ஆண்டு ஜூலை மாதம் அவர்களை பிடித்து வந்த பெண் வீட்டார், ஊர் முன்னிலையில் வைத்து காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றியதோடு இருவரையும் எரித்து கொலை செய்தனர்.இந்த செய்தியானது சில நாட்களுக்கு பிறகு வெளியான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் எஸ்.சி. எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. 2009ல் 660 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 81 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்த செல்வராஜ், மிரட்டல் காரணமாக 2017ல் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் விசாரணை நடந்து முடிந்த நிலையில், 81 சாட்சிகளில் 36 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர். இதனிடையே இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது பெண்ணின் சகோதரரான மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண்ணின் தந்தை துரைசாமி உட்பட 10 பேருக்கு 3 ஆயுள் தண்டனையும்,
வழக்கில் தொடர்புடைய போலீசார் தமிழ்மாறன், செல்லமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது காட்டுமிராண்டி தனமான கொலை என்றும், கவுரவத்திற்கு எதிரான இந்த கொலை அரிதிலும் அரிதான வழக்கு என நீதிபதி உத்தமராஜா கருத்து தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்