அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் மரணம் - சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு

அ.ம.மு.க பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெற்றிவேல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

Update: 2020-10-16 03:41 GMT
உடல் நலம் பாதிக்கப்பட்ட  வெற்றிவேலுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 6ம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்கை சுவாச கருவிகள் மூலம் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும்  சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் மரணமடைந்தார். அவரது உடல் கொரோனா வழிகாட்டு விதிமுறைபடி சுகாதார துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிவேல் மறைவு - டிடிவி தினகரன் இரங்கல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளரும்,  இனிய நண்பருமான வெற்றிவேல் மறைவு, மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரத்தையும் அளிப்பதாக, தனது இரங்கல் செய்தியில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அன்பை பெற்றவரும்,  அமமுக நடத்தி வரும் புனிதப் போரில் ஒரு தளபதியாக களத்தில் நின்றவரான வெற்றிவேல் மறைவு, கட்சிக்கும், தனிப்பட்ட முறையில் தனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அமமுகவினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

வெற்றிவேல் மறைவிற்கு துணை முதலமைச்சர் இரங்கல் 

அமமுக பொருளாளர்  வெற்றிவேல் மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்,. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வெற்றிவேல் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்,. 

வெற்றிவேல் மறைவு - திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 
சென்னை மாநகர மேயராக தான் இருந்தபோது -  மாமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி, அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை, தேவைகளை மாமன்றத்தில் எடுத்து வைத்து, அவற்றுக்கு தீர்வு கண்டவர்  வெற்றிவேல் என்று தெரிவித்துள்ளார்.ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் தொகுதி மக்களின் பிரச்சினைகளைச் சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமாக எடுத்து வைத்தவர் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், வெற்றிவேல் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவரது கட்சித் தொண்டர்களுக்கும், ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிவேல் மறைவு - பாஜக மாநில தலைவர் முருகன் இரங்கல்

முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் மறைவு மிகுந்த வேதனை தருவதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். எளிய குடும்பத்தில் பிறந்து கடுமையான உழைப்பால் பொது வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை பிடித்தவர் என்றும், அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக, இரங்கல் செய்தியில் முருகன் தெரிவித்துள்ளார். 

இதேபோல, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் , காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும், வெற்றிவேல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.




 

Tags:    

மேலும் செய்திகள்