நடிகர் வடிவேல் பாலாஜி உயிரிழப்பு - தனியார் மருத்துவமனைகளில் அலைக்கழிக்கப்பட்டாரா?

நகைச்சுவையால் பலரையும் சிரிக்க வைத்த நடிகர் வடிவேல் பாலாஜி, இறுதி நாட்களில் தனியார் மருத்துவமனைகளில் அலைக்கழிக்கப்பட்டு உயிரிழந்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2020-09-11 15:15 GMT
மதுரையை சேர்ந்த பாலாஜி, சினிமா மீதான ஈர்ப்பால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க ஆயத்தமாகி சின்னத்திரைக்குள் வந்தார்... 

ஆரம்ப காலங்களில் பெண் வேடமிட்டும், விதவிதமான காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், வடிவேல் பாலாஜி தன் பெயரை நிலை நிறுத்தினார். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம். 

வடிவேலுவை போலவே தன் உடல் மொழியையும், நகைச்சுவை உணர்வையும் மெருகேற்றிக் கொண்ட அவர், சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். 

பின்னர் கோலமாவு கோகிலா, யாருடா மகேஷ் உள்ளிட்ட படங்களிலும் நடித்து சினிமா நடிகராக உயர்ந்தார். 42 வயதான இவர், வெளிநாடுகளுக்கும் சென்று கலைநிகழ்ச்சிகளை நடத்தி ஏராளமான ரசிகர்களை பெற்றார். 

இந்த சூழலில் தான் திடீரென வடிவேல் பாலாஜிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. மூளையில் ரத்தக் கசிவு, பக்கவாதம், மூச்சுத் திணறல், இதய துடிப்பு குறைந்து போனது என பல காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால் மாரடைப்பால் தான் மகன் பாதிக்கப்பட்டதாக கூறுகிறார் அவரது தாய் திலகவதி. அதேநேரம் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி தந்தும் மகனை காப்பாற்ற முடியவில்லை என வேதனை தெரிவிக்கிறார் அவரின் தாய்... 

பின்னர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட வடிவேல் பாலாஜிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்படவே, ஓமாந்தூரார் அரசு மருத்துமனைக்கு  கொண்டு  செல்லப்பட்டிருக்கிறார். பின்னர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், திடீரென தன் மூச்சை நிறுத்தினார்...

கிட்டத்தட்ட 15 நாட்களாக 5 மருத்துவமனைகளுக்கு வடிவேல் பாலாஜி அலைக்கழிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. எப்படியும் வடிவேல் பாலாஜியை காப்பாற்றியே தீருவோம் என துடித்த உறவினர்கள் அவரின் மரணச் செய்தியால் உடைந்து போய்விட்டனர். 

நடிகர் வடிவேல் பாலாஜிக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். தந்தையின் மறைவு செய்தியை கேட்டு அவர்கள் கதறி அழுத காட்சி பார்ப்போரின் கண்களையும் குளமாக்கியது... 

சின்னத்திரையில் பல வருடங்களாக வடிவேல் பாலாஜியுடன் பயணித்த நடிகர் ரோபோ சங்கர், நடிகர் ராமர், தாடி பாலாஜி, சேது உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

 மேலும் நடிகர் விஜய் சேதுபதி, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதேநேரம் நடிகர்கள் தனுஷ், கார்த்தி உள்ளிட்ட பிரபலங்களும் வடிவேல் பாலாஜியின் மரணச் செய்தியை கேட்டு இரங்கல் தெரிவித்தனர்...

பலரையும் சிரிக்க வைத்து அதில் மனநிறைவு கண்ட ஒரு கலைஞன், இன்று அவர்களை மீளாத்துயரில் விட்டுவிட்டு சென்றிருக்கிறார்... 
Tags:    

மேலும் செய்திகள்