தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கள் வீடுகளில் ரமலான் சிறப்பு தொழுகை...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கள் வீடுகளில் இருந்தவாறு மக்கள் ரமலான் பண்டிகையை கொண்டாடினர்.

Update: 2020-05-25 09:11 GMT
வீடுகளில் ரமலான் சிறப்பு தொழுகை - வித்தியாசமான அனுபவம் என தெரிவித்த இஸ்லாமியர்கள்



கொரோனா தாக்கம் காரணமாக, சென்னையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ரெட்டேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் குடும்பத்தினருடன் தங்கள் இல்லங்களிலேயே ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். வழக்கமாக மசூதிகளில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெறும் நிலையில், இம்முறை வீடுகளில் தொழுகையில் ஈடுபட்டது வித்தியாசமான அனுபவமாக  இருந்ததாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.

நாகூர் தர்கா முன்பு சிறப்பு பிரார்த்தனை



ஊரடங்கு உத்தரவால் நாகூர் தர்கா மூடப்பட்டுள்ள நிலையில், தர்கா  வாசலில் ஒன்றுகூடிய இஸ்லாமியர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஊரடங்கு உத்தரவை மீறி தர்கா முன்பு மக்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மொட்டை மாடிகளில் ரமலான் சிறப்பு தொழுகை




ஊரடங்கு உத்தரவு காரணமாக, சென்னை தாம்பரம் பகுதிகளில் தங்கள் உறவினர்களுடன்  மொட்டை மாடிகளில் குடும்பம் குடும்பமாக இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்

சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகை - கொரோனாவிலிருந்து உலகம் மீண்டு வர வேண்டி பிரார்த்தனை



மதுரையில் வீட்டுக்குள்ளும், வீட்டு மாடிகளிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றுகூடி ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அரசு அறிவுறுத்தலின்படி சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்தும், கைகளை சோப்பால் கழுவியபின்னரும் தொழுகையில் 
அவர்கள்  ஈடுபட்டனர். உலக அமைதி வேண்டியும், கொரோனாவில்  இருந்து மக்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் என்றும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

வீடுகளிலும் தோட்டங்களிலும் சிறப்பு தொழுகை



நெல்லையில் கூட்டுத் தொழுகைக்கு பதிலாக எளிமையான முறையில் தங்கள் வீடுகளிலும், தோட்டங்களிலும் உற்றார் உறவினர்களுடன் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்

முக கவசம் அணிந்து சிறப்புத் தொழுகை


 
ஊரடங்கு காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், ஈரோட்டில் இஸ்லாமியர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் சிறப்பு தொழுகையை நிறைவேற்றினர்

Tags:    

மேலும் செய்திகள்