எஸ்.ஐ. தேர்விலும் குளறுபடியா? - அடுத்த சர்ச்சை
காவல் உதவி ஆய்வாளருக்கான தேர்வில் அடுத்தடுத்த பதிவு எண் கொண்ட நூறு தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதால், போட்டி தேர்வு முறைகேடு புகார் மீண்டும் பூதாகரமாக்கியுள்ளது.;
969 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு தமிழகமெங்கும் இரு பிரிவுகளாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்த தேர்வில், பொதுப்பிரிவில் சுமார் 1 லட்சத்து 44 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
2 வது பிரிவில் சுமார் 17 ஆயிரத்து 400 காவலர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.
இந்த தேர்வுக்கான முடிவுகளை நேற்று இரவு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில், வேலூர் மாவட்டத்தில் பொதுப்பிரிவில் தேர்வு எழுதிய அடுத்தடுத்த பதிவு எண் கொண்ட 100 நபர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதாக முடிவு வெளியாகியுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, காவல்துறையில் பணிபுரிந்துவருபவர்கள் எழுதிய 2 வது பிரிவு தேர்வில், ஒரே தேர்வறையில் தேர்வு எழுதிய 6 நபர்கள் முதல் பத்து இடத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 4, ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் முறைகேடு புகார்கள் எழுந்து வரும் நிலையில், ஜனவரி மாதம் நடந்த எஸ்.ஐ. தேர்விலும் சர்ச்சை எழுந்துள்ளதால், போட்டித்தேர்வுகள் மீது அதிருப்தி அதிகரித்துள்ளது.