சித்திரை திருவிழா கோலாகலம் : முளைப்பாரி சுமந்து பெண்கள் நேர்த்திக்கடன்

சிவகாசி அருகே உள்ள பூலாயூரணி காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.;

Update: 2019-05-08 21:34 GMT
சிவகாசி அருகே உள்ள பூலாயூரணி காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேள தாளங்களுடன் யானை முன் செல்ல, அதனை தொடர்ந்து முளைப்பாரி சுமந்து சென்ற பெண்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஏராளமான பெண்கள் கும்மி அடித்தும், குலவையிட்டும்  வழிபாடு நடத்தினர்.


முக்கானி உச்சினிமாகாளி அம்மன் கோவில் திருவிழா



திருச்செந்தூர் அருகே முக்கானியிலுள்ள உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, விரதம் இருந்த பெண்கள், முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்று தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர். முன்னதாக, கும்மிபாட்டு மற்றும் கிராமியப் பாடல்களை  பாடி  கும்மியடித்து வழிபாடு நடத்தினர். இதில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும்   ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா



வேலூர்  மாவட்டம் அனைக்கட்டு அருகே  வேலங்காடு கிராம பகுதி ஏரியில் பொற் கொடியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாதம் கடைசி புதன்கிழமை அன்று நடைபெறும் புஷ்பரத ஏரித் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி பக்தர்கள் அருள்பாலித்தார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த ஏரியிலேயே ஆடு கோழிகளை பலியிட்டு, உணவாக சமைத்து அங்கு வந்த பொதுமக்களுக்கு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்