"கல்வித் துறையை அரசே ஏற்கும் என திமுக-அதிமுக வாக்குறுதி அளிக்குமா?" - ஓய்வுபெற்ற நீதிபதி கேள்வி

கல்வித் துறையை தனியார் ஆதிக்கத்திலிருந்து மீட்டு முழுமையாக அரசே நடத்த வேண்டும் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2019-02-24 14:37 GMT
சென்னை சேப்பாக்கத்தில், 'தமிழ்நாடு உயர் கல்வி பாதுகாப்பு இயக்கம்' சார்பில் கல்வி மீட்பு, கல்வித்துறை எதிர்நோக்கும் சவால்கள் என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ஆசிரியர் முதல் துணை வேந்தர் நியமனங்கள் வரையும், எல்.கே.ஜி. முதல் ஆராய்ச்சி படிப்புகள் வரை பணம் கொழிக்கும் வர்த்தக கூடாரமாக குற்றம் சாட்டப்பட்டது.

கல்வி மற்றும் மருத்துவத்தில் தனியார் ஆதிக்கத்தை மீட்கவும், அது மக்கள் இயக்கம் மூலமே நிறைவேறும் என்றும் வலியுறுத்தி ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், கல்வித்துறையில் தனியார் இருக்காது என திமுக-அதிமுக தேர்தல் வாக்குறுதி அளிக்குமா என்று கேள்வி எழுப்பினார். கல்வித்துறையில் பணம் தலைவிரித்தாடுவதால், ஏழை, எளிய மக்கள் பயனடைய முடியாமல் உள்ளது என்றும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டினர்.

இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைப் போல், கல்வி மற்றும் மருத்துவத் துறையை முழுக்க முழுக்க அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று  கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பணமில்லாமல் உயர்கல்வியில் எதுவும் நடைபெறுவதில்லை என உயர்கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முரளி, பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

இலவச கல்வி, தரமான மருத்துவம் ஆகியவை ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகள் அதற்கான கொள்கைகளை வகுத்து அரசு செயல்பட வேண்டும் என்பதும் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!
Tags:    

மேலும் செய்திகள்