14-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் : கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி

ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, உயிர் நீத்தவர்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Update: 2018-12-26 05:53 GMT
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, செருதூர், நாகூர் ஆகிய கடற்கரையில் அதிகாலையில் பொதுமக்கள் திரண்டனர். உயிர்நீத்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்தனர். திதி கொடுத்து, கடலில் பால் ஊற்றியும்  மலர்தூவியும்  அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவுதினத்தை அனுசரிக்கும் வகையில், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம்

வேளாங்கண்ணி பேராலயம் சார்பில், கடற்கரையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கிழக்கு கடற்கரைக்கு மவுன ஊர்வலமாக சென்றனர். அங்கு பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நினைவுதூணுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறப்பு திருப்பலி நடத்தி, இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அங்கு வந்த பொதுமக்கள் நினைவுதூண் முன் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஒப்பாரி வைத்து கண்ணீர் வடித்த பெண்கள் 

இதேபோல் கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் அரசு கலை கல்லூரி முன்பு திரண்ட பொதுமக்கள், அங்கிருந்து கடற்கரைக்கு மவுன ஊர்வலம் சென்றனர். அங்கு கடலில் பாலை ஊற்றியும், பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர். சில பெண்கள் கடற்கரையில் ஒன்று கூடி, சுனாமியில் இறந்தவர்களை நினைத்து ஒப்பாரி வைத்து அழுதனர். 
Tags:    

மேலும் செய்திகள்