கந்தசஷ்டி விழா : பக்தர்கள் குவிந்ததால் களை கட்டியது சூரசம்ஹாரம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2018-11-13 20:27 GMT
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருச்செந்தூரில் குவிந்திருந்தனர். திருச்செந்தூர் கடற்கரையில் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுவாமி ஜெயந்தி நாதர், சூரனை வதம் செய்தார். 

சூரசம்ஹாரம் : " தந்தி டிவி " நேரலை ஒளிபரப்பு 

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை நமது " தந்தி டிவி" நேரலையாக ஒளிபரப்பு செய்தது. இதனால், லட்சக்கணக்கானோர் நேரிலும், கோடிக்கணக்கானோர் தொலைக்காட்சி மூலமும் சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு களித்தனர். நாளை முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

மருதமலை கோயிலில் சூரசம்ஹாரம் : ஏராளமான பக்தர்கள் சுவாமி வழிபாடு 

இதேபோல் கோவை மாவட்டம் மருதமலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்வு விமரிசையாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட  தேரில் எழுந்தருளிய முருகப்பெருமான் சிங்கமுகன், யானைமுகன், பானுகோவன், காரகாசூரன் ஆகிய நான்கு பேரை வதம் செய்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். 

சண்முக பெருமானுக்கு 108 சங்குகளால் அபிஷேகம்

கந்தசஷ்டியையொட்டி, கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சாமிநாத கோவிலில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். யாகத்தை ஒட்டி, உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளிய சண்முகப் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தேன், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்களில் 108 சங்குகளை கொண்டு, அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முருகன் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம் : திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் வழிபாடு 

கந்த சஷ்டியைமுன்னிட்டு பவானி கூடுதுறையில் உள்ள முருகன் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக  உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு யாகங்களும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிவனடியார்கள் கந்த சஷ்டி கவசத்தை பாடினர். இந்த நிகழ்வில் கலந்து  கொண்ட பக்தர்கள் முருகனை வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்