ராமநாதபுரம் : பச்சை மரகத நடராஜர் சிலையின் சிறப்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை கோயிலில் உள்ள பச்சை மரகத நடராஜர் சிலையை திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் அந்த மரகத நடராஜர் பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்.

Update: 2018-11-05 12:12 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் உள்ள மங்கல நாதேஸ்வரர் கோவில் பக்தர்களால் ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது சேதுபதி மன்னர்கள் பச்சை மரகதக் கல்லை கொண்டு நடராஜர் சிலையை நாட்டிய கோலத்தில் வடிவமைத்து கோவிலையும் கோபுரத்தையும் கட்டியதாக கூறப்படுகிறது. 

மற்ற கோவில்களைப் போல் அல்லாமல், ஐந்தரை அடி உயரமுள்ள பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர், தனி சன்னதியில் நாட்டிய கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மத்தளம் முழங்க மரகதக்கல் உடையும் என்று சொல்வதற்கேற்ப திருவிழாக் காலங்களிலும் பூஜை நேரங்களிலும் இங்கு மேளதாளம்  வாசிப்பது கிடையாது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே திருவாதிரை நட்சத்திரத்தன்று மட்டும் பச்சை மரகதக் கல்லின் பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்பட்டு அபிஷேகங்கள் நடைபெறும்.அன்று ஒருநாள் மட்டுமே சன்னதி திறக்கப்படும் 

சிவாலயங்களில் சுவாமி இரவு பள்ளியறைக்கு செல்லும் முன் ஓதுவார்களால் பாடப்படும் பாடல் இக்கோயிலில்தான் மாணிக்கவாசகரால் அரங்கேற்றப்பட்டது. இத்தகைய சிறப்பு மிக்க, பச்சை மரகத நடராஜர் சிலையை திருட வந்தவர்கள், காவலர் செல்லமுத்துவை தாக்கி உள்ளனர்.

சிலையை திருட முயன்ற போது அலாரம் ஒலித்ததால், அந்த முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிஉள்ளனர். உண்டியல் பணம், விலை உயர்ந்த பூஜை பொருட்கள் ஆகியவற்றை கொள்ளை அடிக்க முயற்சிக்காததால் இது மரகத நடராஜரை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. 

மரகதக்கல்லால் ஆன  நடராஜர் சிலை பல கோடி ரூபாய் மதிப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது, கண்காணிப்பு கேமராக்கள் கோவிலின் உள் பிரகாரத்தில் உள்ள நிலையில் வெளிப்பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருப்பதால் சிலை திருட வந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார்,தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்