செவ்வாய் கிழமைகளில் திருவிழா போல காட்சி தரும் மதகடிப்பட்டு சந்தை

புதுச்சேரியில் வாரந்தோறும் செயல்பட்டு வரும் நூற்றாண்டு பழமை வாய்ந்த சந்தை மதகடிப்பட்டு சந்தை

Update: 2018-09-07 13:21 GMT
புதுச்சேரி மாநிலம் திருபுவனை அருகே மதகடிப்பட்டு பகுதியில் இயங்கி வருகிறது இந்த சந்தை. நூற்றாண்டு பழமை வாய்ந்த சந்தை என்றாலும் மக்கள் வெள்ளத்தால் புதுப் பொலிவோடு காட்சி தருகிறது இந்த சந்தை. புதுச்சேரிக்கும், விழுப்புரத்திற்கும் இடைப்பட்ட பகுதி இது என்பதால் இங்கு வரும் வியாபாரிகளும், பொதுமக்களும் கை நிறைய லாபத்துடன் செல்கின்றனர்.

அருகில் உள்ள விவசாய நிலத்தில் விளைவித்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை ப்ரெஷ் ஆக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர் வியாபாரிகள். இதேபோல் பாரம்பரிய விதைகள், மளிகை சாமான்கள் என அனைத்தும் விலை குறைவாக, தரமாக கிடைப்பதே இந்த சந்தையின் சிறப்பம்சம்.

அரிவாள், மண்வெட்டி போன்ற விவசாய இடுபொருட்களும், மாடு, ஆடு போன்ற கால்நடைகளுக்கு தேவையான சலங்கை, மணி போன்ற பொருட்களும் இங்கு விதவிதமாக  கிடைக்கிறது. இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள்  சந்தையில் கிடைக்கும் என்பதால் மற்ற ஊர்களில் இருந்தும் இங்கு மக்கள் வருகின்றனர். கடல் சார்ந்த பகுதி என்பதால் குறைவான விலையில் கிடைக்கிறது கருவாடு வகைகள்.

காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அன்றாட சமையலுக்கு கூறுகளாக விற்பனை செய்வதை வாங்கிச் செல்லும் மக்களும் உண்டு. வீடுகளில் வளர்ப்பதற்கு ஏற்ற செடி வகைகளும் இங்கு கிடைக்கிறது.

வாரந்தோறும் செவ்வாய் கிழமை மதியம் முதல் இரவு வரை நடக்கும் இந்த சந்தைக்கு முதல் நாளில் இருந்தே ஆயத்தப்பணிகள் நடக்கிறது. கொஞ்சம் பணம் எடுத்து வந்தாலும் பை நிறைய பொருட்களை வாங்கிச் செல்வதால் செவ்வாய் கிழமையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையும் உள்ளதாக கூறுகிறார்கள் மக்கள். 

விவசாயிகளையும், மக்களையும் இணைக்கும் இதுபோன்ற சந்தைகள் பல தரப்பினரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

Tags:    

மேலும் செய்திகள்