மஸ்கான்சாவடி சந்தை : குறைந்த விலையில் செல்லப்பிராணிகள் கிடைக்கும் சந்தை

செல்லப்பிராணிகளை நேசிப்பவர்களுக்காகவே சென்னையில் இருக்கிறது மஸ்கான் சாவடி சந்தை.

Update: 2018-09-03 14:07 GMT
செல்லப்பிராணிகளை நேசிப்பவர்களுக்காகவே சென்னையில் இருக்கிறது மஸ்கான் சாவடி சந்தை. பொதுவாக தங்கள் வீடுகளுக்கு செல்லப்பிராணிகளை வாங்க அலைந்து திரிந்து அதிக பணம் கொடுப்பவர்கள் உண்டு. ஆனால் எல்லாமே ஒரே இடத்தின் கீழ் கிடைக்கும் இடமாக இருக்கிறது சென்னையின் பிரதான பகுதியில் இயங்கும் இந்த சந்தை. சென்னை உயர்நீதிமன்றம் உள்ள பிராட்வே பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது மஸ்கான்சாவடி சந்தை. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சந்தை இது என்பது தான் இதன் அடையாளம். ஆரம்ப காலங்களில் கோழிச்சந்தையாக தொடங்கப்பட்ட இந்த சந்தையில் இன்று கண்கொள்ளா செல்லப்பிராணிகள் அணிவகுத்து நிற்பதை பார்க்க முடிகிறது.


லேப்ரடார், பொமேரியன், ஜெர்மன் ஷெப்பர்டு என உயர்ரக நாய் வகைகள் தொடங்கி, ஆடு, கோழி, புறா, லவ் பேர்ட்ஸ், முயல், வான் கோழி என எல்லாவற்றையும் இங்கு வாங்க முடியும் என்பதே இந்த சந்தையின் ஸ்பெஷல். பந்தய புறாக்களை வாங்க இந்த சந்தைக்கு வரும் இளைஞர்கள் அதிகம் உண்டு. விதவிதமான புறாக்களும், வெளிநாட்டு பறவைகளும் இந்த சந்தைக்கு கூடுதல் அழகை கொண்டு வந்து சேர்க்கிறது.

வளர்ப்பு மீன்களை வெரைட்டியாகவும், மொத்தமாகவும் வாங்க விரும்புவோருக்கு ஏற்ற இடம் இது. மற்ற கடைகளில் விற்பனை செய்வதை விட இந்த சந்தையில் வாங்கினால் பல நூறு ரூபாய்களை மிச்சப்படுத்த முடியும் என்பதும் இந்த சந்தையின் சிறப்பு. மேலும் உணவுக்கு பயன்படும் மீன்கள், நாட்டுக்கோழி, காடை, ஆடு, நாட்டுக்கோழி முட்டைகள் என எல்லாம் இங்கு கிடைக்கிறது. மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த கருங்கோழியையும் இங்கு விற்பனை செய்கிறார்கள். 

நாய்க்கு தேவையான பெல்ட், சங்கிலி வகைகள், புறாக் கூண்டுகள், அதற்கான உணவுகள் என எல்லாம் குறைவாகவே இங்கு கிடைப்பதால் வாரத்தில் ஒரு நாள் மக்கள் இங்கு தேடி வந்து வாங்கிச் செல்வதுண்டு. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்கு  தொடங்கும் இந்த சந்தையானது பகல் 12 மணி வரை நடக்கிறது. தனக்கு பிடித்தமான செல்லப்பிராணிகளை வாங்க வருவோர் ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தைகளுக்கு பறவைகள், விலங்குகளை காட்ட வரும் பெற்றோரையும் இங்கு அதிகம் பார்க்க முடியும்.

சென்னை மட்டுமின்றி பிற மாநில மக்களுக்கும் இந்த சந்தை அத்துபடி. குறைந்த விலையில் இதனை மொத்தமாக வாங்கிச் செல்லும் வெளிமாநில வியாபாரிகளும் அதிகம். சென்னை பிராட்வே பகுதியில் இருந்து இங்கு எளிதாக செல்ல முடியும் என்பதால் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமாகவே இருக்கும். சென்னையின் பிரதான பகுதியில் இப்படி ஒரு சந்தையா? என ஆச்சரியப்படுபவர்கள் இங்கு ஒரு முறை வந்து பார்த்தால் அதன் பிரம்மிப்பில் இருந்து மீண்டு வர மாட்டீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்