தமிழகத்துக்கு தண்ணீர் அளவு அதிகரிப்பு

கேரளாவில் வயநாடு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-08-09 12:20 GMT
கர்நாடகாவில் பருவமழை தொடங்கிய காலத்தில் இருந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள கபினி கேஆர்எஸ், ஹேமாவதி ஹாரங்கி ஆகிய அணைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. 

தற்போது கேரளாவில் வயநாடு பகுதியில் பெய்யும் மழையும் வந்து சேருவதால், இன்று பிற்பகலில் கபினி அணையிலிருந்து 71 ஆயிரம் கன அடியும் கேஆர்எஸ் அணை யில் இருந்து 40 ஆயிரம் கன அடியும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலமாக, தற்போது தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

தற்போது கேஆர்எஸ், கபினி இரு அணைகளும் மொத்த கொள்ளளவை எட்டிய நிலையில் தண்ணீர் அதிகமாக வருவதால் கூடுதலாக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

"மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 25 ஆயிரம் கனஅடி  நீர் திறப்பு"

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 311 கன அடியாகவும், நீர் இருப்பு 89 புள்ளி ஐந்து ஒன்பது டி.எம்.சி ஆகவும் உள்ளது. இந்த நிலையில் டெல்டா பாசனத்திற்கான நீர் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு, 19 ஆயிரம் கன அடியில் இருந்து, 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, கபினி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால்117 அடியாக உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

               "முழு கொள்ளளவை எட்டும் நிலையில் பில்லூர் அணை "

கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடி ஆகும். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் தற்போது 97 அடியை எட்டியுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

              "விடிய விடிய கனமழை - ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு"

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. ஆழியாறு அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 811 கன அடி நீர் வந்ததால், நள்ளிரவில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மனக்கடவு வழியாக கேரளாவின் மூலத்துரா அணையை அடைந்தது. காட்டாற்று வெள்ளம் திடீரென்று பாய்ந்ததால், மூலத்துரா அணையின் மதகுகள் உடைந்தன. இதனால், நெடும்பாறை, மீனாட்சிபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு செல்லும் இடத்தில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்