எஸ்.பி.கே நிறுவனத்தில் தொடரும் வருமான வரி சோதனை
பதிவு: ஜூலை 20, 2018, 01:49 PM
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள spk நிறுவன உரிமையாளர் செய்யாதுரைக்கு சொந்தமான நான்கு வீடுகள் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர், சோதனை நடத்தி வருகின்றனர். 

சோதனையின் நான்காவது நாளான நேற்று, செய்யாதுரையின் ஆடிட்டர் மற்றும் அவரின் கல்குவாரியில் மேளாளராக பணிபுரியும் செந்தில் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

அருப்புக்கோட்டை வருமான வரி அலுவலகத்தில் மதியம் 12 மணியளவில் தொடங்கிய விசாரணை, இரவு 11 மணி வரை நடைபெற்றது. இந்தநிலையில், நேற்று மாலை சென்னையில் இருந்து அருப்புக்கோட்டை சென்ற வருமான வரித்துறையின் உதவி ஆணையர் ஜெயராகவன் தலைமையிலான 8 பேர் கொண்ட சிறப்புக் குழு,  செய்யாதுரையின் மகன்களிடம் விசாரணை நடத்தியது. 

விசாரணையின் போது, கைப்பற்றப்பட்ட 180 கோடி ரூபாய் பணம், 105 கிலோ தங்கம் உள்ளிட்டவை குறித்து வருமான வரித்துறையினர் கேள்விகள் எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணை இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.