ஏழுமலையான் சொத்துக்களை பொது ஏலம் விடும் விவகாரம் - அறங்காவலர்கள் குழு எடுத்த முடிவுக்கு ஆந்திர அரசு தடை

திருப்பதி ஏழுமலையான் கோ​யிலுக்கு தமிழக பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 23 சொத்துக்கள் உட்பட 50 சொத்துக்களை விற்கும் முடிவுக்கு ஆந்திர அரசு தடை விதித்துள்ளது.

Update: 2020-05-26 07:25 GMT
தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் பெயரில் தமிழகத்தில் எழுதி வைத்து உள்ள 23 சொத்துக்கள் உள்பட 50 சொத்துக்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய, கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி அறங்காவலர்கள் முடிவு செய்ததற்கு தடைவிதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சொத்துக்களை ஏலத்தில் விட இந்து அமைப்புகள், பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஏழுமலையான் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்யும் முடிவு தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள், விவாதங்கள், பக்தர்கள் மனநிலை ஆகியவை குறித்து ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏலம் விடும் முடிவை தேவஸ்தான நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மடாதிபதிகள், பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை நடத்த வேண்டும்  எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட இடங்களை கோயில்கள் கட்டுவதற்கு அல்லது இந்து தர்ம பிரச்சார பணிகளுக்கு பயன்படுத்த முடியுமா? என்பது பற்றி ஆய்வு செய்யவும் ஆந்திர அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தேவஸ்தான நிர்வாக அதிகாரி உடனடியாக ஆந்திர அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்யவும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்