ஃபிட் இந்தியா இயக்கம் : பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்

உடலை ஆரோக்கியத்துடனும், கட்டுக் கோப்பாகவும் வைத்துக் கொள்வதுடன், ஃபிட் இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

Update: 2019-08-29 09:36 GMT
உடலை ஆரோக்கியத்துடனும், கட்டுக் கோப்பாகவும் வைத்துக் கொள்வதுடன், ஃபிட் இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார். டெல்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கில், தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, ஃபிட் இந்தியா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனையொட்டி நமது பாரம்பரிய வி​ளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

"பரபரப்பான சூழலில் உடலை பேண நேரமில்லை" - பிரதமர் மோடி

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, வலிமை மற்றும் ஹாக்கி மட்டையால், உலக மக்களை வியப்பில் ஆழ்த்திய மேஜர் தயான் சந்த் நுற்றாண்டு விழாவான இந்த நாளில், இந்த ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்குவது சாலச் சிறந்தது என்றார்.

இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று அறைகூவல் விடுத்த பிரதமர், விளையாட்டு உட்கட்டமைப்புகளை தமது அரசு மேம்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சில ஆண்டுகள் வரைக்கும் மனிதன், ஒரு நாளைக்கு சராசரியாக 7 முதல் 8 கிலோ மீட்டர் வரை நடந்தான் என்றும், தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு நடக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது என்றும் குறிப்பிட்டார். முன்பு எல்லாம் 50 அல்லது 60 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என்று கூறிய பிரதமர், தற்போது 35 முதல் 40 வயது உள்ள இளைஞர்களுக்கு மாரடைப்பு வருவதை சுட்டிக்காட்டினார். நீரிழிவு,  ஹைப்பர் டென்ஷன் போன்ற நோய்கள் தாக்காமல், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் கட்டுக்கோப்பு என்பது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். விளையாட்டுத்துறையில் விருதுபெறும் வீரர்களுக்கு, நிகழ்ச்சியில் இறுதியில் பிரதமர் மோடி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்