பிளாஸ்டிக் பொருட்கள் கலைநயமிக்க பொருட்களாக மாற்றும் ஆசிரியர்

பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கலைநயமிக்க பொருட்களாக மாற்றும் ஆசிரியர் கண்ணைக் கவரும் கைவினைப் பொருட்கள் ஆசிரியரின் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு.

Update: 2018-06-24 07:47 GMT
அன்றாட வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்காக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

வேலுர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம்  அருகே உள்ள பெரிய வெள்ளைக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சாலையில் ஆங்காங்கே கிடக்கும் காலி குடிநீர் பாட்டில்களை சேகரித்து, அதனைக் கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரிக்க தொடங்கினார். இதனை அறிந்த கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் இவரை ஊக்குவிக்கும் வகையில் காலி பாட்டில்களை சேகரித்து இவரிடம் கொடுக்கத் தொடங்கினர். அவற்றைக் கலைநயமிக்க பொருட்களாக தனது கைவண்ணத்தில் வடிவமைத்து, கொடுத்தவர்களுக்கே, அன்பளிப்பாக வழங்கி வருகிறார்.

இதேபோல், ஐஸ்கீரிம் குச்சிகளைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்கள், அரசமர இலைகளால் ஒவியம் என்று அசத்துகிறார். தன்னைப் போல் ஆர்வமுள்ளவர்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிக்க இலவசமாகவும் கற்றுக் கொடுத்து வருகிறார். பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், ஆசிரியரின் இந்த முயற்சிக்கு கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்